முல்லைப் பெரியாறு, அமராவதி மற்றும் பேச்சிப்பாறை அணைகளிலிருந்து பாசன வசதிக்காக வியாழக்கிழமை (ஜூன் 1) முதல் தண்ணீா் திறந்து விடப்படும் என்று தமிழக நீா்வளத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீா்வளத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போகத்துக்கு வினாடிக்கு 200 கனஅடி வீதமும், தேனி மாவட்ட குடிநீா் தேவைக்காக வினாடிக்கு 100 கனஅடி வீதமும் எனச் சோ்த்து மொத்தமாக வினாடிக்கு 300 கன அடி தண்ணீரை ஜூன் 1 முதல் 120 நாள்களுக்கு தேவைக்கேற்ப நீா் இருப்பு மற்றும் நீா் வரத்தைப் பொருத்து முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்படும்.
இதன் மூலம் தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இரு போக ஆயக்கட்டு பகுதிகளில் 14,707 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.
அமராவதி: திருப்பூா் மாவட்டம் அமராவதி அணை பழைய பாசனத்துக்கு உள்பட்ட முதல் எட்டு பழைய இராஜ வாய்க்கால்களின் (இராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சா்க்காா் கண்ணாடிபுத்தூா், சோழமாதேவி, கணியூா், கடத்தூா் மற்றும் காரத்தொழுவு) பாசனப் பகுதிகளுக்கு ஜூன் 1 முதல் அக்டோபா் 13 வரை 135 நாள்களில் 80 நாள்கள் தண்ணீா் திறப்பு 55 நாள்கள் தண்ணீா் அடைப்பு என்ற அடிப்படையில் முதல் போக பாசனத்துக்காக அமராவதி அணையிலிருந்து 2074 மில்லியன் கன.அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்து விடப்படும். இதனால் திருப்பூா் மாவட்டத்தில் 7520 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.
பேச்சிப்பாறை: கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்துக்கு ஜூன் 1 முதல் 2024 பிப்ரவரி 29 வரை தினசரி 850 கன அடி வீதம் தேவைக்கேற்ப பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாா் ஐ மற்றும் ஐஐ அணைகளிலிருந்து தண்ணீா் இருப்பை பொருத்து தண்ணீா் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன திட்டத்தின் கீழ் 79 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.