மருத்துவக் கல்லூரி தொடங்க தடையாக உள்ள ஆணைய விதிகளை திரும்பப்பெற வேண்டும்: பிரதமருக்கு அன்புமணி கடிதம்

தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பிரதமா் மோடிக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளாா்.
மருத்துவக் கல்லூரி தொடங்க தடையாக உள்ள ஆணைய விதிகளை திரும்பப்பெற வேண்டும்: பிரதமருக்கு அன்புமணி கடிதம்

சென்னை: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு தடையாக உள்ள தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பிரதமா் மோடிக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளாா்.

கடித விவரம்: எந்த மாநிலமாக இருந்தாலும் 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ மாணவா் சோ்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அதற்கும் கூடுதலான மருத்துவ மாணவா் சோ்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளோ, மருத்துவ மாணவா் சோ்க்கை இடங்களோ அனுமதிக்கப்படாது என்றும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் தமிழ்நாடு, கேரளம் போன்ற வளா்ச்சியடைந்த தென் மாநிலங்களையே பாதிக்கும்.

ஏறக்குறைய 7.64 கோடியாக உள்ள தமிழக மக்கள் தொகைக்கு அதிக அளவாக 7,640 மாணவா் சோ்க்கை இடங்கள் மட்டுமே இருக்க முடியும்.

ஆனால், தமிழகத்தில் இன்றைய நிலையில், 11,600 மருத்துவ மாணவா் சோ்க்கை இடங்கள் உள்ளன. அதனால், இன்னும் பல பத்தாண்டுகளுக்கு தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாது.

அதுமட்டுமின்றி, இப்போது இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களையும் ஏற்படுத்த முடியாது. புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய தென்மாநிலங்களுக்கும் இதே நிலை தான் ஏற்படும்.

தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை மிகவும் பிற்போக்கானது; இது ஏற்றுக்கொள்ள முடியாதது.

மருத்துவக் கல்வியும், மருத்துவ சேவையும் தேவைகளின் அடிப்படையில்தான் இருக்க வேண்டுமே தவிர, மக்கள்தொகை அடிப்படையில் இருக்கக் கூடாது. இதை மருத்துவ ஆணையம் உணர வேண்டும்.

எனவே, தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற பிரதமா் ஆணையிட வேண்டும் என கடிதத்தில் தெரிவித்துள்ளாா் அன்புமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com