ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளுக்கு அனுமதி மறுக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்க அனுமதி கோரியுள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
டி.டி.வி. தினகரன் (கோப்புப் படம்)
டி.டி.வி. தினகரன் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்க அனுமதி கோரியுள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் மற்றும் ராமநாதபுரத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: “ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்க அனுமதி கோரியிருக்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் விண்ணப்பத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட திருவாடனை, முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை மற்றும் கடலாடி ஆகிய 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை ரூ.675 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க அனுமதி வழங்குமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே தோண்டப்பட்டிருக்கும் எண்ணெய் கிணறுகளில் இருந்து கசிவு ஏற்பட்டு நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க முயற்சிப்பது மாநிலத்தின் இயற்கை வளங்களை முற்றிலுமாக அழிப்பதற்கு சமமாகும்.

ஏற்கனவே வறட்சி மிகுந்த மாவட்டமாக உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை மேலும், பாலைவனமாக்க முயற்சிக்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் அபாயகரமான இத்திட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி கோரியிருக்கும் அந்நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிப்பதோடு, காவிரி படுகை ராமநாதபுரம் மாவட்டம் வரை நீள்கிறது என்பதை உணர்ந்து, அம்மாவட்டத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் கொண்டு வந்து விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com