முல்லைப்பெரியாறு அணையில் தேசிய பாறை, இயந்திரவியல் நிலைய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு: விவசாயிகள் கண்டனம்

முல்லைப்பெரியாறு அணையில் தேசிய பாறை மற்றும் இயந்திரவியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் புதன்கிழமை ஆய்வுகள் நடத்தினர். 
முல்லைப்பெரியாறு அணையில் தேசிய பாறை, இயந்திரவியல் நிலைய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு: விவசாயிகள் கண்டனம்


கம்பம்: முல்லைப்பெரியாறு அணையில் தேசிய பாறை மற்றும் இயந்திரவியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் புதன்கிழமை ஆய்வுகள் நடத்தினர். 

முல்லைப்பெரியாறு அணையில், பெங்களூருவில் உள்ள தேசிய பாறை மற்றும் இயந்திரவியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் முனைவர் ஸ்ரீ பால் ஆர்.நாயக், பிரவீனா தாஸ் ஜெனிபர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் திங்கள்கிழமை அணைப்பகுதிக்கு வந்தனர். அங்கு முகாமிட்டு செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆய்வு நடத்தினர், வியாழக்கிழமையும் ஆய்வு நடத்துகின்றனர். 

ஆய்வில் பிரதான அணை, பேபி அணை, சுரங்க பகுதி, கேரளாவுக்கு உபரி நீர் செல்லும் 13 மதகுகள், வல்லக்கடவு தரைப்பாலம், நீர் கசியும் அளவு ஆகியவற்றை பார்வையிட்டனர். அவர்களுடன் அணையின் செயற்பொறியாளர் ஜே.சாம்இர்வின், உதவி கோட்ட பொறியாளர் த.குமார், உதவி பொறியாளர்கள் பொ.ராஜகோபால், பிரவீண், நவீன்குமார், கேரள தரப்பில் நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் அனில்குமார், உதவி பொறியாளர் அருள்ராஜ் உள்ளிட்டோர் விஞ்ஞானிகளின் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறினர். 

இதுபற்றி செயற்பொறியாளர் ஜே.சாம்இர்வின் கூறும்போது, பெங்களூரூவில் உள்ள தேசிய பாறை மற்றும் இயந்திரவியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் வியாழக்கிழமையும் ஆய்வு நடத்துகின்றனர், மத்திய தலைமை கண்காணிப்பு குழுவிடம் ஆய்வின் அறிக்கைகளை சமர்ப்பிக்கின்றனர் என்றார்.

விவசாயிகள் கண்டனம்
அணைப்பகுதியில் ஆய்வு நடத்துவதை கண்டித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறும் போது, பெங்களூரை தலைமை இடமாகக் கொண்ட இந்த அமைப்பு, மத்திய சுரங்க துறையின் கீழ் வரும் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.

நாடு முழுவதும் உள்ள சுரங்கம், நீர்மின் திட்டங்கள், அணுமின் திட்டங்கள், எண்ணெய் எரிவாயு துறை சார்ந்த திட்டங்களுக்கு நிபுணத்துவத்துடன் கூடிய ஆலோசனையை 20 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வருகிறது.

எவ்வித பிரச்னையும் இல்லாத, பலமாக இருக்கும் அணையில் திடீரென்று ஆய்வு செய்வதை விவசாயிகள் சார்பில் கண்டிக்கிறோம். 

அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில்,  இவர்களை அழைத்து சோதனை எதுவும் செய்வதற்கு காரணம் என்ன என்பதை மத்திய கண்காணிப்பு குழு  விளக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com