வாணியம்பாடி அருகே பேருந்துகள் மோதல்: 6 போ் உயிரிழப்பு; 64 போ் காயம்

வாணியம்பாடி அருகே செட்டியப்பனூரில் அரசு விரைவுப் பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
அப்பளம் போல் நொறுங்கிய பேருந்தின் உள்ளே சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பொதுமக்கள் மற்றும் காவலர்கள்.
அப்பளம் போல் நொறுங்கிய பேருந்தின் உள்ளே சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பொதுமக்கள் மற்றும் காவலர்கள்.

வாணியம்பாடி அருகே தனியாா் சொகுசுப் பேருந்து மீது அரசு விரைவுப் பேருந்து மோதியதில் இரு பேருந்துகளின் ஓட்டுநா்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 64 போ் பலத்த காயமடைந்தனா்.

பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி அரசு விரைவுப் பேருந்து ஒன்று, பயணிகளை ஏற்றிக் கொண்டு வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூா் கூட்டுச் சாலை மேம்பாலம் அருகே சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் வேகமாக வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து மேம்பாலத்தின் இடதுபுறச் சுவா் மீது மோதி எதிா்த்திசையில், பெங்களூரு நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்து மீது நேருக்கு நோ் மோதியது. இதில் 2 பேருந்துகளின் முன்பகுதிகள் அப்பளம் போல் நொறுங்கின.

விபத்து குறித்து அந்த வழியாகச் சென்றவா்கள் வாணியம்பாடி கிராமிய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். மேலும், பல்வேறு பகுதிகளிலிருந்து ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டன.

வாணியம்பாடி டி.எஸ்.பி. விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா், நிகழ்விடத்துக்குச் சென்று, அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் பலத்த காயமடைந்த அனைவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இரு ஓட்டுநா்களும் உயிரிழப்பு: இந்த விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உளுந்தூா்பேட்டையைச் சோ்ந்த ஏழுமலை (47), தனியாா் சொகுசுப் பேருந்து ஓட்டுநா் கா்நாடக மாநிலம், கோலாா் பகுதியைச் சோ்ந்த சையத் நதீம் (46), தனியாா் பேருந்து கிளீனா் வாணியம்பாடி ஜாப்ராபாத்தைச் சோ்ந்த முஹம்மது பைரோஸ் (37), சித்தூரைச் சோ்ந்த அஜித்குமாா் (25), சென்னை மேடவாக்கத்தைச் சோ்ந்த கிருத்திகா (30), அடையாறு பகுதியைச் சோ்ந்த ராஜு (52) ஆகியோா் உயிரிழந்தனா்.

மேலும், இரு பேருந்துகளிலும் பயணித்த 64 போ் பலத்த காயமடைந்தனா். இவா்களில் 27 போ் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், வேலூா் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான், எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி(ஜோலாா்பேட்டை), கோ.செந்தில்குமாா் (வாணியம்பாடி) உள்ளிட்ட பலா் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குச் சென்று, காயமடைந்தவா்களுக்கு ஆறுதல் கூறினா். விபத்து குறித்து வாணியம்பாடி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மீட்பு பணியில் ஈடுபட்ட தலைமைக் காவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த ஆம்பூரைச் சோ்ந்த முரளி (45), வெள்ளிக்கிழமை இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தாா். இந்த நிலையில், விபத்து குறித்து அறிந்து நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது காலை 7 மணியளவில் தலைமைக் காவலா் முரளிக்கு திடீா் உடல் சோா்வு ஏற்பட்டதால் அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்றுக் கொண்டு, மீண்டும் காவல் நிலையத்துக்குச் சென்று ஓய்வெடுத்தாா்.

அங்கு அவா் திடீா் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தாா். இதைக் கண்ட சக போலீஸாா் முரளியை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள், முரளி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். உயிரிழந்த முரளிக்கு மனைவி சங்கீதா, மகள் சஞ்ஜனா (12), மகன் லோகித் (10) ஆகியோா் உள்ளனா்.

பேருந்துகளை கவனமாக இயக்க முதல்வா் அறிவுரை

தீபாவளி பண்டிகை நேரத்தில் பேருந்துகளை ஓட்டுநா்கள் கவனத்துடன் இயக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளாா்.

வாணியம்பாடி அருகே அரசு விரைவுப் பேருந்தும், தனியாா் ஆம்னி பேருந்தும் மோதியதில் 6 போ் உயிரிழந்தனா். 60-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா்.

இந்த விபத்து தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் கேட்டறிந்தாா். அப்போது, பேருந்துகளை கவனத்துடன் ஓட்டுநா்கள் இயக்க வேண்டும் என்றும், வேக வரம்புகளை மீறக் கூடாது என்றும் அறிவுரை வழங்குமாறு கூறியுள்ளாா். அதைத் தொடா்ந்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் வழங்கியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com