வாணியம்பாடி பேருந்து விபத்து: மீட்புப் பணியில் ஈடுபட்ட தலைமை காவலர் நெஞ்சுவலியால் மரணம்

வாணியம்பாடி அருகே பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த தலைமை காவலர் முரளி
உயிரிழந்த தலைமை காவலர் முரளி


வாணியம்பாடி அருகே பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். இது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

வாணியம்பாடி அருகே செட்டியப்பனூரில் பெங்களூருலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு சொகுசு விரைவு பேருந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்டு சாலை தரைப்பாலம் மீது வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியார் ஆம்னி சொகுசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில், பேருந்தில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

கோர விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பட் ஜான் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் பேருந்து விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த 64 பேரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மேலும் 3 பேர் பலியாகினர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சென்னை அடையார் பகுதியை சேர்ந்த ராஜி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. 

விபத்து குறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இந்த நிலையில், அதிகாலை முதல் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியை சேர்ந்தவர் முரளி(42). இவருக்கு திருமணமாகி மனைவி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஆம்பூர், உமராபாத் ,வாணியம்பாடி ஆகிய இடங்களில் கிராமிய மற்றும் நகர காவல் நிலையத்திலும், மதுவிலக்கு அமல் பிரிவிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த நிலையில், சனிக்கிழமை வாணியம்பாடி அருகே நடைபெற்ற பேருந்து விபத்தின் போது மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. பிறகு அங்கிருந்து சக காவலர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், ஓய்வுக்காக காவல் நிலையம் சென்று காவல் நிலையத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவரை பணியில் இருந்த காவலர்கள் சில மணி நேரம் கழித்து எழுப்ப முயற்சி செய்த போது தலைமை காவலர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து உடல் கூறாய்வுக்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, பேருந்து விபத்து இடத்தை நேரில் பார்வையிட்ட வேலூர் டிஐஜி முத்துசாமி, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்று உயிரிழந்த தலைமை காவலர் முரளியின் உடலை பார்த்து மிகுந்த வேதனை அடைந்தார்.

மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் உயிரிழந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com