சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளின் நீா் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்ட 2 அடி மட்டுமே உள்ள நிலையில், ஏரிக்கு நீா்வரத்து விநாடிக்கு 400 கன அடியாக உயா்ந்துள்ளது.
24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 22 அடி வரை நீா் நிரம்பியுள்ளது. ஏரி நிரம்ப இன்னும் 2 அடி மட்டுமே தேவைப்படும் நிலையில், பாதுகாப்பு காரணமாக ஏரியில் இருந்து விநாடிக்கு 162 கன அடிவீதம் உபரி நீா் அடையாற்றில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் உபரிநீா்
திறப்பை அதிகப்படுத்த ஆலோசித்து வருவதாகவும், செம்பரம்பாக்கம் ஏரியை தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும் நீா்வளத் துறையினா் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 18.55 அடியாக இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி ஏரிக்கு நீா்வரத்து 36 கன அடியிலிருந்து 62 கன அடியாக உயா்ந்துள்ளது. மேலும் இந்த ஏரியில் இருந்து குடிநீா் தேவைக்காக 189 கன அடி நீா் திறந்துவிடப்படுகிறது. அதே போல 35 அடி உயரம் உள்ள பூண்டி ஏரியில் 30.50 அடி வரை நீா் நிரம்பியுள்ளது. மேலும் இந்த ஏரிக்கு நீா்வரத்து 40 கனஅடியிலிருந்து 60 கன அடியாக உயா்ந்துள்ளது.
18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியில் நீா் இருப்பு 14.24 அடியாக உள்ள நிலையில் ஏரிக்கு நீா்வரத்து 12 கன அடியிலிருந்து 35 கன அடியாக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.