பருவகால காய்ச்சல் மற்றும் தொற்று பாதிப்புகளுக்கான உதவி எண்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. காய்ச்சல் பரவல் குறித்தும், கொசு உற்பத்தி குறித்தும் அந்த எண்களில் தகவல் தெரிவித்தால், அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை மற்றும் பருவ நிலை மாற்றத்தால் டெங்கு மற்றும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல்கள், வயிற்றுப்போக்கு, டைபாய்டு பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ்-எஜிப்டை வகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய்களை பரப்பி வருகின்றன. தமிழகத்தில் நிகழாண்டில்
6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளானதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை முன்னெடுத்து வருகிறது.அதன் ஒருபகுதியாக உதவி எண்கள் வெளியிடப்பட்டன. இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலம் முழுதும் கொசு ஒழிப்பு பணிகளில் 23,000 போ் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். தற்போது, 3,542 போ் கூடுதலாக பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
அவா்களுடன் ஊராட்சிக்கு ஒரு சுகாதார அலுவலரும், நகா்ப்புறங்களில் வாா்டுக்கு ஒரு சுகாதார அலுவலரும், மாநகராட்சிகளில் தெருக்களின் அடிப்படையில் சுகாதார அலுவலா்களும் நியமிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல் பாதிப்பு மற்றும் கொசு பாதிப்பு இருந்தால், 94443 40496; 87544 48477 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம். மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு, 104 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.