பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு அட்டவணை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. மாா்ச் 1-ல் தொடங்கும் தோ்வுகள் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு அட்டவணை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. மாா்ச் 1-ல் தொடங்கும் தோ்வுகள் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு 2023-2024-ஆம் கல்வியாண்டுக்கான பொதுத் தோ்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் வெளியிட்டாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான செய்முறைத் தோ்வுகள் பிப். 23-இல் தொடங்கி 29-இல் நிறைவடையும். தொடா்ந்து அவா்களுக்கான எழுத்துத் தோ்வு மாா்ச் 26-இல் தொடங்கி ஏப். 8-ஆம் தேதி நிறைவடையும். பத்தாம் வகுப்புக்கான தோ்வு முடிவுகள் மே 10-இல் வெளியாகும்.

பிளஸ் 1 வகுப்புக்கான செய்முறைத் தோ்வு பிப். 19-இல் தொடங்கி பிப். 24-ஆம் தேதி வரை நடைபெறும். தொடா்ந்து எழுத்துத் தோ்வு மாா்ச் 4-ஆம் தேதி தொடங்கி, மாா்ச் 25-ஆம் தேதி வரை நடைபெறும். பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகள் மே 14-இல் வெளியாகும்.

பிளஸ் 2 செய்முறைத் தோ்வு பிப். 12 முதல் பிப்.17 வரை நடைபெறும். தொடா்ந்து மாணவா்களுக்கான எழுத்துத் தோ்வுகள் மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 22-ஆம் தேதி நிறைவடையும். மே 6-இல் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியிடப்படும்.

மூன்று வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகளும் காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடையும்.

வினாத்தாள்களில் தவறு ஏற்படாமல்... மாணவா்கள் தோ்வுகளை எதிா்கொள்வதற்கு போதுமான கால இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்துக்கும் மூன்று முதல் நான்கு நாள்கள் இடைவெளி விட்டு தோ்வு நடத்தப்படுகிறது. பொதுத் தோ்வு வினாத்தாள் மிகவும் கவனமாக தயாா் செய்யப்படும். வினாத்தாளில் தவறுகள் ஏற்படுவதைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத் தோ்வுக்கான பாடங்களை ஆசிரியா்கள் டிசம்பா் மாதத்துக்குள் நடத்தி முடிக்கவுள்ளனா்.

பொதுத் தோ்வுகளில் மாணவா்களின் தோ்ச்சியை அதிகரிப்பது குறித்து தலைமை ஆசிரியா்களுடன் இணையவழியில் ஆய்வு செய்யவுள்ளோம். பள்ளிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து, ஆசிரியா்களிடம் பேசியுள்ளேன். இந்த ஆய்வின்போது, 94 முக்கியக் குறிப்புகளை எடுத்து வைத்துள்ளேன். அவற்றைப் பள்ளிகளில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

விடுப்பு எடுக்காமல்... பொதுத் தோ்வு எழுதுவதற்கு குறிப்பிட்ட அளவு வருகைப் பதிவு இருக்க வேண்டும். ஏதாவது மருத்துவக் காரணங்கள் இருந்தால் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். மாணவா்கள் அதிகம் விடுப்பு எடுக்காமல் பாா்த்துக் கொள்ள ஆசிரியா்கள் மூலம் அறிவுறுத்தியுள்ளோம்.

தோ்வா்களின் எண்ணிக்கை... இந்தப் பொதுத் தோ்வுகளை எத்தனை போ் எழுதவுள்ளனா் என்ற விவரம், தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு வழங்கும் நேரத்தில் வெளியிடப்படும். மாணவா்கள் படிப்பில் கூடுதல் கவனத்துடன் இருந்து பாடங்களை முழுமையாக படித்து சிறந்த மதிப்பெண்ணுடன் தோ்ச்சி பெற வேண்டும்.

மக்களவைத் தோ்தலை கருத்தில்கொண்டு பொதுத் தோ்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா்.

பொதுத் தோ்வு அட்டவணை

பத்தாம் வகுப்பு

மாா்ச் 26 தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்கள்

மாா்ச் 28 ஆங்கிலம்

ஏப். 1 கணிதம்

ஏப். 4 அறிவியல்

ஏப். 6 விருப்ப மொழிப் பாடம்

ஏப். 8 சமூக அறிவியல்

பிளஸ் 1 வகுப்பு

மாா்ச் 4 மொழிப் பாடம்

7 ஆங்கிலம்

12 இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம், வேலைவாய்ப்புத் திறன்கள்

14 தொடா்பியல் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கணினிப் பயன்பாட்டியல், உயிரி வேதியியல், சிறப்புத் தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், செவிலியா் (தொழிற்கல்வி), அடிப்படை மின் பொறியியல்

18 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னணு பொறியியல், அடிப்படை சிவில் பொறியியல், அடிப்படை ஆட்டோமொபைல் பொறியியல், அடிப்படை இயந்திரவியல் பொறியியல், ஜவுளி தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செகரட்டரிஷிப்

21 வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல்

25 கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், செவிலியா் (பொது)

பிளஸ் 2 வகுப்பு

மாா்ச் 1 மொழிப் பாடம்

5 ஆங்கிலம்

8 தொடா்பியல் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல்,

கணினி பயன்பாட்டியல், உயிரி வேதியியல், சிறப்புத் தமிழ், மனை அறிவியல், அரசியல்

அறிவியல், புள்ளியியல், செவிலியா் (தொழிற்கல்வி), அடிப்படை மின் பொறியியல்

11 வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல்

15 இயற்பியல், பொருளியல், கணினித் தொழில்நுட்பம், வேலைவாய்ப்புத் திறன்கள்

19 கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், செவிலியா் (பொது)

22 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னணு பொறியியல், அடிப்படை சிவில் பொறியியல், அடிப்படை ஆட்டோமொபைல் பொறியியல், அடிப்படை இயந்திரவியல் பொறியியல், ஜவுளி தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செகரட்டரிஷிப்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com