பிசான சாகுபடிக்கு பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாய நிலங்களில் பிசான சாகுபடிக்காக பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து வெள்ளிக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து அணையிலிருந்து பாய்ந்து வரும் தண்ணீர்
தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து அணையிலிருந்து பாய்ந்து வரும் தண்ணீர்


அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாய நிலங்களில் பிசான சாகுபடிக்காக பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து வெள்ளிக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்து மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

இதையடுத்து தமிழக முதல்வர் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் பிசான சாகுபடிகளை மேற்கொள்ளும் வகையில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார்.

பாபநாசம் அணையிலிருந்து பிசான சாகுபடிக்குத் தண்ணீர் திறந்துவிடும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் வஹாப் உள்ளிட்டோர்.

இதையடுத்து பாபநாசம் அணையில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் வஹாப், மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், செயற்பொறியாளர் மாரியப்பன் ஆகியோர் தண்ணீர் திறந்து விட்டனர். 

தொடர்ந்து இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறும்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்குக் கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய், மற்றும் தூத்துக்குடி, மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய், மருதூர் கீழக்கால் கால்வாய், தெற்கு பிரதானக்கால்வாய், வடக்கு பிரதானக்கால்வாய் ஆகிய கால்வாய்களின் கீழுள்ள 86,107 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்கள் பாசன வசதிபெறும். அணைகளில் இருந்து நவ. 17 முதல் 2024-ஆம் ஆண்டு மார்ச் 31 முடிய 137 நாட்களுக்கு மழைப் பொழிவு, தண்ணீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப சுழற்சி முறையில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் ஏரல் ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள் பயன்பெறும்.

விவசாயப் பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் நீர்வினியோகப் பணியில் நீர் வளத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, விக்கிரமசிங்கபுரம் நகராட்சித் தலைவர் செல்வசுரேஷ் பெருமாள், திமுக நகரச் செயலர் கணேசன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் மணிமுத்தாறு, தென்காசி மாவட்டம் ராமநதிம், கடனாநதி அணைகளிலிருந்தும் பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com