திருச்செந்தூா் கந்த சஷ்டி விழாவில் கட்டண உயா்வு இல்லை: அறநிலையத் துறை

திருச்செந்தூா் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி ரூ.1,000 சிறப்பு தரிசன கட்டண நடைமுறை கொண்டுவரப்பட்டதற்குப் பின்னால் பரப்பப்படும் தகவல்கள் வதந்தி என அறநிலையத் துறை விளக்கம் அளித்துள்ளது.
திருச்செந்தூா் கந்த சஷ்டி விழாவில் கட்டண உயா்வு இல்லை: அறநிலையத் துறை



திருச்செந்தூர்: திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி ரூ.1,000 சிறப்பு தரிசன கட்டண நடைமுறை கொண்டுவரப்பட்டதற்குப் பின்னால் பரப்பப்படும் தகவல்கள் தவறானவை என அறநிலையத் துறை விளக்கம் அளித்துள்ளது.

பிற கட்டணங்கள் கடந்த அதிமுக ஆட்சியிலேயே உயர்த்தப்பட்ட நிலையில், இப்போது உயர்த்தப்பட்டதாக திட்டமிட்டு தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அறநிலையத் துறை கூறியுள்ளது.

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் அவதார நோக்கம், தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பதே ஆகும். 
இதற்கான தல வரலாற்றை உணர்த்தும் திருவிழாவாக கந்த சஷ்டி விழா திருச்செந்தூரில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் ஆறு நாள்கள் நடைபெறுகிறது. சஷ்டி விழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலில் தங்கி 6 நாள்கள் விரதம் இருப்பது வழக்கம்.
நிகழாண்டு கந்த சஷ்டி விழா நவ. 13-ஆம் தேதி தொடங்கியது. இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா சனிக்கிழமை (நவ. 18) நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.

தரிசன கட்டணம்: திருச்செந்தூர் கோயிலில் இலவச பொது தரிசனம் மற்றும் ரூ.100 சிறப்பு தரிசன கட்டணம் என இரண்டு நடைமுறை உள்ளது. இந்த நிலையில் கந்த சஷ்டி விழாவையொட்டி, நிகழாண்டில் ரூ.1,000 சிறப்பு தரிசன கட்டண நடைமுறையை இந்து சமய அறநிலையத் துறை கொண்டுவந்துள்ளது. கடந்த ஆண்டு சஷ்டி விழாவின்போது, இதே கட்டணம் ரூ.800-ஆக இருந்தது.

இதுதவிர பிற கட்டணங்கள் அனைத்தும் 2018}ஆம் ஆண்டிலேயே உயர்த்தப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறை ஆணையரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சாதாரண மற்றும் விசேஷ தினங்களில் ரூ.200}ஆக இருந்த அபிஷேக கட்டணம், விசேஷ தினங்களில் ரூ.500 ஆகவும், திருவிழா நாள்களில் ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது.
அதேபோல, விஸ்வரூப தரிசனத்துக்கு விசேஷ நாள்கள் மற்றும் கந்த சஷ்டி விழா நாள்களில் ரூ. 500-ஆக இருந்த கட்டணம்  விசேஷ நாள்களுக்கு ரூ.2 ஆயிரமாகவும், கந்த சஷ்டி திருவிழா நாள்களுக்கு ரூ.3 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது. 

இந்தக் கட்டண உயர்வானது 2018 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், திருச்செந்தூர் கோயிலில் ரூ.1,000 பெற்றுக்கொண்டு ரசீது வழங்காமல் தரிசனத்துக்கு அனுமதிப்பதாகக் கூறி இந்து முன்னணி அமைப்பினர், திருக்கோயில் இணை ஆணையர் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இதுகுறித்து திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள்முருகன் கூறியதாவது: கடந்த இரு நாள்களாக சமூக வலைதளங்களில் ரூ.1,000 கட்டண தரிசன வரிசையில் உரிய ரசீது வழங்காமல் பணம் மட்டும் பெற்றுக்கொண்டு பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிப்பதாக தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. ரூ.1,000 கட்டண தரிசன வரிசையில் கோயில் பணியாளர் சீட்டு வழங்குவதை மறைத்துவிட்டு,  அதற்குரிய பணத்தைப் பெறுவதை மட்டுமே விடியோவில் பதிவு செய்து பரப்பியுள்ளனர். இந்த விடியோவை எடுத்த திருச்செந்தூரை சேர்ந்த பிருத்திவிராஜ் என்பவர் மீது காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com