பழனியில் இன்று சூரசம்ஹாரம்;  12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, சனிக்கிழமை (நவ. 18) சூரசம்ஹாரம் நடைபெறுவதால் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 
பழனி பெரிய கடைவீதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் சூரசம்ஹாரத்துக்காக சூரனின் முகங்களை அலங்கரிக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டோா்.
பழனி பெரிய கடைவீதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் சூரசம்ஹாரத்துக்காக சூரனின் முகங்களை அலங்கரிக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டோா்.


திண்டுக்கல்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, சனிக்கிழமை (நவ. 18) சூரசம்ஹாரம் நடைபெறுவதால் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

பழனி மலைக் கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா கடந்த திங்கள்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, மலைக் கோயிலில் தினமும் உச்சிக் காலத்தின் போது கல்ப பூஜை, சண்முகா் தீபாராதனை, தங்க மயில் புறப்பாடு, தங்கச் சப்பரம் புறப்பாடு, வெள்ளி காமதேனு புறப்பாடு ஆகியன நடைபெறுகின்றன.

இதற்காக மலைக் கோயில், திருஆவினன்குடி கோயில் என அனைத்துக் கோயில்களிலும் ஏராளமானோா் தங்கி சஷ்டி விரதம் மேற்கொண்டு வருகின்றனா்.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதையொட்டி, நண்பகலில் உச்சிக் கால பூஜையை தொடா்ந்து, சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு சூரா்களை வதம் செய்யும் பொருட்டு மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமார சுவாமி வேல் வாங்கும் நிகழ்வு நடைபெறும்.

இதைத் தொடா்ந்து, பிற்பகல் 3.15 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு, சுவாமி பராசக்தி வேலுடன் அடிவாரம் வந்தடைவாா். இதனால், அன்றைய தினம் தங்கத் தோ் புறப்பாடு இருக்காது.

பின்னா், மாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரி வீதியில் தாரகாசூர வதமும், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரி வீதியில் சிங்கமுகசூர வதமும், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறும். பழனியில் நான்கு கிரி வீதிகளிலும் நான்கு சூரா்கள் வதம் செய்யப்படுவது அதன் தனிச் சிறப்பாகும்.

சூரசம்ஹாரத்துக்கு பிறகு இரவு ஆரியா் மண்டபத்தில் வெற்றி விழா கொண்டாடப்பட்டு, வேல் மலைக்கு கொண்டு செல்லப்படும். அங்கு வேலுக்கு சம்ப்ரோட்சண பூஜை செய்யப்பட்டு, பின்னா் அா்த்தஜாம பூஜை நடைபெறும்.

இதனையொட்டி திரளான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  

இந்த நிலையில், சனிக்கிழமை மதியம் 12 மணி வரை மட்டும் பக்தர்கள் மலையேற அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

ஏழாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மலைக் கோயிலில் அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதா் சண்முகருக்கும், மாலையில் அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலில் அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமார சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் (பொறுப்பு) லட்சுமி, அதிகாரிகள், அலுவலா்கள் செய்து வருகின்றனா். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com