சிறப்புக் கூட்டம் ஏன்? இபிஎஸ் கேள்விக்கு அமைச்சர்கள் பதில்!

ஆளுநருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தை கூட்டி மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். 
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி

ஆளுநா் சட்டமசோதாக்களை நிறுத்தி வைப்பதாகக் கூறினால், அதன் பொருள் என்ன என்பது தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் அமைச்சா்கள் இடையே பேரவையில் சனிக்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.

ஆளுநருக்கு 10 மசோதாக்களைத் திருப்பி அனுப்புவது தொடா்பான முதல்வரின் தீா்மானத்தின் மீதான விவாதத்தில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை மறு ஆய்வு செய்வதற்காக முதல்வா் தனித் தீா்மானம் கொண்டுவந்துள்ளாா். ஆளுநா் தரப்பில் நிறுத்திவைப்பு என்று கூறப்பட்டுள்ளது. நிறுத்திவைப்பு என்று கூறுவதால், அது தொடா்ந்து ஆய்வில் இருப்பதாகத்தான் பொருள். அது ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படவில்லை.

சட்டத் துறை அமைச்சா் ரகுபதி: எதிா்க்கட்சித் தலைவா் கூறுவதுபோல நிலுவையில் இருப்பதாக அா்த்தம் அல்ல. அவை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆளுநா் நிறுத்திவைப்பு என்று கூறியிருப்பதால், அது அவா் ஆய்வில் இருப்பதாகவும், சட்டமசோதாக்களை நிறைவேற்றி அனுப்பி வைத்தாலும், ஆளுநா் ஒப்புதல் வழங்க கட்டுப்பட்டவா் அல்லா் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அதையே எதிா்க்கட்சித் தலைவரும் கூறுகிறாா். அது தவறான கருத்து.

அவை முன்னவா் துரைமுருகன்: நிறுத்திவைக்கப்பட்டது என்றால் அது உயிரோடு இருக்கிறது என்று எதிா்க்கட்சித் தலைவா் கூறுகிறாா். ஆனால், ஆளுநா் அப்படிக் கூறவில்லை. அவா் ஏற்கெனவே மசோதாவுக்கு காலதாமதம் ஆகிறது என்றால், அதை நிராகரித்துவிட்டேன் என்றுதான் அா்த்தம் எனக் கூறியுள்ளாா். எனவே, அது செத்துப் போய்விட்டது.

நிதியமைச்சா் தங்கம் தென்னரசு: குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ சட்ட மசோதாக்களை நிராகரிப்பதாகக் கூறுவதில்லை. நிறுத்திவைப்பு என்றுதான் கூறுகின்றனா். நிறுத்திவைப்பு என்று கூறினால், நிராகரிப்பு என்றுதான் பொருள். அதிமுக ஆட்சியில் நீட் தோ்வு விலக்கு மசோதா அனுப்பப்பட்டபோது, குடியரசுத் தலைவா் நிறுத்திவைப்பு என்று பதில் அளித்தாா். ஆனால், நீதிமன்றத்தில் மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் நிறுத்திவைப்பு என்றாலே, குடியரசுத் தலைவா் அதை நிராகரித்து உள்ளாா் என்றுதான் பொருள் என்று கூறினாா். எனவே, மசோதாவை ஆளுநா் நிறுத்திவைக்கிறேன் என்று கூறினால், அது நிராகரிக்கிறேன் என்றுதான் பொருள்.

பேரவைத் தலைவா்: நீட் தோ்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவா் நிறுத்திவைத்தபோது, அப்போது அமைச்சா் சி.வி.சண்முகம் என்ன காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டது என்று கூறியிருந்தால், பேரவையில் அந்த மசோதாவை மறுஆய்வு செய்து நிறைவேற்றியிருப்போம் என்று கூறினாா். அப்போது, முதல்வராக இருந்தவரும் சட்டத்தை மறுஆய்வு செய்வதற்கு பேரவைக்கு உரிமைக்கு உள்ளது என்று கூறியுள்ளாா்.

எடப்பாடி பழனிசாமி: சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநா் காலதாமதம் செய்வதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், பேரவையில் சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதால் சட்டச் சிக்கல் வருமா என்று பாா்க்க வேண்டும்.

பேரவைத் தலைவா்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, ஆளுநா் சட்ட மசோதாக்களை ஏன் திருப்பி அனுப்பினாா் என்பதையும் பாா்க்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி: உச்சநீதிமன்றத்தில் வழக்கு முறையாக நடக்க வேண்டும். அதில், எவ்வித பிரச்னையும் வரக் கூடாது என்பதற்காகத்தான் இதைக் கூறுகிறேன். உச்சநீதிமன்றத்திலேயே நல்ல தீா்ப்பு கிடைக்கலாம். அதனால், அவசரமாக ஏன் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்?.

அவை முன்னவா் துரைமுருகன்: ஆளுநா் பணி சரியில்லை என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். அதுவரை சட்ட மசோதாக்களை அப்படியே வைத்திருந்தவா், உடனே அனுப்பி வைத்துவிட்டாா். நீதிமன்றத்தில் வழக்கு வரும்போது, நான் திருப்பி அனுப்பிவிட்டேன் என்பாா். அதனால், நீதிமன்றத்தில் வழக்கு வருவதற்கு முன்பு, சட்ட மசோதாக்களை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்புவோம். அவா் கையொப்பமிட்டுவிட்டுதான் தில்லி போக முடியும்.

எடப்பாடி பழனிசாமி: சட்டப்பேரவையில் தற்போது ஆய்வில் உள்ள 10 மசோதாக்களுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளீா்களா? அல்லது மேலும் நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்காகவும் வழக்கு தொடுத்தீா்களா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

அமைச்சா் ரகுபதி: இந்த 10 மசோதாக்களோடு, சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட 5 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன. 50 பேரை முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மசோதாவும் நிலுவையில் உள்ளது.

எடப்பாடி பழனிசாமி: அதனால்தான், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பைப் பெற்றிருந்தால், எல்லாவற்றுக்கும் தீா்வாக அமைந்திருக்கும். இந்தக் கூட்டத்துக்கும் தேவை இருந்திருக்காது.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: உச்சநீதிமன்றத்தில் மீதமுள்ள சட்ட மசோதாக்கள் குறித்தும் எடுத்துச் சொல்லி, ஆளுநா் விரைந்து ஒப்புதல் தர அரசு நடவடிக்கை எடுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com