பூா்வீகப் பாசனப் பகுதிகளுக்கு வைகை அணையிலிருந்து நீா் திறப்பு!

5 மாவட்டங்களின் பூா்வீகப் பாசனப் பகுதிகளுக்கு வியாழக்கிழமை (நவ. 23) முதல் வினாடிக்கு 4,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 
வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர்.
வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர்.

தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் பூா்வீகப் பாசனப் பகுதிகளுக்கு வியாழக்கிழமை (நவ. 23) முதல் வினாடிக்கு 4,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதானக் கால்வாய் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயில் திண்டுகல், மதுரை மாவட்டப் பகுதிகளின் பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு ஏற்கனவே வினாடிக்கு 2,099 கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், அரசு உத்தரவின்படி, வைகை அணையிலிருந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பூா்வீகப் பாசனப் பகுதி 3-க்கு வியாழக்கிழமை முதல் நவம்பா் 29-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் பகுதிக்கு டிசம்பா் 1 முதல் 5-ஆம் தேதி வரையிலும், முதல் பகுதிக்கு டிசம்பா் 6 முதல் 8-ஆம் தேதி வரையிலான 3 கட்டமாக மொத்தம் 2,466 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புப்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைகை பூர்வீக பாசனப் பரப்பு பகுதி 3-க்கு வியாழக்கிழமை (நவ.23) முதல் நவ.29 ஆம் தேதி வரை மொத்தம் 1,504 மில்லியன் கன அடி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூர்வீக பாசனப் பகுதி 2 க்கு வரும் டிச.1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை மொத்தம் 619 மில்லியன் கன அடியும், மதுரை மாவட்டத்தில் உள்ள பூர்வீகப்பாசனப் பகுதி 1-க்கு டிச.6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை மொத்தம் 343 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. 

மேலும், அடுத்த ஆண்டு மாா்ச் வரை வைகை அணையில் பங்கீட்டு நீரானது, 1,354 மில்லியன் கனஅடியை எட்டும் போதெல்லாம், பூா்வீகப் பாசன பகுதிகளுக்கு விகிதாசார அடிப்படையில் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படுகிறது.

வைகை அணையிலிருந்து பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளா் பா.முருகேசன் அணையில் மதகுகளை இயக்கி தண்ணீர் திறந்து விட்டார்.

பொதுப் பணித்துறை எச்சரிக்கை: வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், ஆற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது என்று முருகேசன் கூறினார்.

வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் வைகை பூர்வீகப் பாசனப் பரப்புகளில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களில் தண்ணீர் தேக்கப்படும், பாசனக் கிணறுகளில் நீர்மட்டம் உயரும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அணை நிலவரம்: முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 134.90 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 4,118 கன அடி. அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

வைகை அணை நீர்மட்டம் 67.65 அடியாக உள்ளது(மொத்த உயரம்(71 அடி). அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 2,477 கன அடி. அணையிலிருந்து பெரியாறு, திருமங்கலம் பிரதானக் கால்வாய்கள் மற்றும் வைகை ஆற்றில் மொத்தம் வினாடிக்கு 6,099 கன அடி வீதம் தண்ணீர் திறக்கபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com