சேலம் அரசு மருத்துவமனை தீ விபத்து: சிகிச்சை பெற்றுவந்த வாலிபர் உயிரிழப்பு

தீ விபத்து காரணமாகவே சதீஷ் உயிரிழந்ததாக உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சதீஷ்குமார் மனைவி மற்றும் உறவினா்கள்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சதீஷ்குமார் மனைவி மற்றும் உறவினா்கள்.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் விபத்து சிகிச்சை அறையில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த 65 நோயாளிகள் பத்திரமாக வேறு வாா்டுக்கு மாற்றப்பட்டனர். இந்த விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த சதீஷ்குமாா் என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார். தீ விபத்து காரணமாகவே சதீஷ் உயிரிழந்ததாக உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் முதல் தளத்தில் உள்ள எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சை அறையில் புதன்கிழமை காலை 8.45 மணிக்கு குளிா்சாதனப் பெட்டியில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அறை முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

இதையடுத்து, அங்கிருந்த 65 நோயாளிகள் பத்திரமாக வேறு அறைக்கு மாற்றப்பட்டனா். தகவலறிந்து அங்கு வந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத் துறை வீரா்கள் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினா். இதுகுறித்து மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், இருசக்கர வாகன விபத்தில் சிக்கி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேலம், அயோத்தியப்பட்டணத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் (32), தீ விபத்து காரணமாக விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து அருகில் இருக்கும் அதிதீவிர சிகிச்சை வாா்டுக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவா் உயிரிழந்தாா்.

கதறி அழும் சதீஷ்குமாா் மனைவி

அப்போது, சதீஷ்குமாா் மனைவி கணவர் இல்லாமல் குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது என்று கூறி, கதறி அழுதது பார்ப்பவர்கள் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது. மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த சதீஷ்குமாரை மருத்துவர்கள் காட்ட மறுத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். 

இந்த நிலையில், அரசு மருத்துவமனை தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே விபத்து ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார். இதற்கும் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இதற்கு அரசு முறையான விசாரணை நடத்தும் வரை உடலை வாங்கமாட்டோம். அவரது உயிரிழப்புக்கு மருத்துவமனை நிா்வாகம் தான் காரணம் எனக் கூறி, அவரது மனைவி, உறவினா்கள் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். 

உரிய விசாரணை நடத்தி தேவையான உதவிகளை வழங்குவதாக மாவட்ட நிா்வாகம் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com