திருவண்ணாமலை தீபத் திருவிழா தேரோட்டம்: மின்சாரம் பாய்ந்து 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டத்தின்போது, மின்சாரம் பாய்ந்து 40-க்கும் மேற்பட்டோர் கீழே விழுந்து, காயமடைந்தனர்.
நகை அடகுக் கடையின் மாடியிலும், உள்ளேயும் சிக்கிக்கொண்ட பக்தர்கள்.
நகை அடகுக் கடையின் மாடியிலும், உள்ளேயும் சிக்கிக்கொண்ட பக்தர்கள்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டத்தின்போது, மின்சாரம் பாய்ந்து 40-க்கும் மேற்பட்டோர் கீழே விழுந்து, காயமடைந்தனர்.

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 7-வது நாளான வியாழக்கிழமை (நவம்பர் 23) பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெற்றது. காலை விநாயகர் தேரோட்டமும், மதியம் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் தேரோட்டமும் நடைபெற்றது.

மாலை 5.15 மணிக்கு மகா ரதம் எனப்படும் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தைக் காண மாட வீதிகள் மற்றும் அதன் இணைப்பு தெருக்களில் பல லட்சம் பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

தேரோட்டம் தொடங்கிய 15 நிமிடத்தில் திருவண்ணாமலை நகர காவல் நிலையம் எதிரே உள்ள தெருவின் முனையில் இருந்த பழக்கடை, நகை அடகுக் கடையோரம் நின்றிருந்த பக்தர்கள் 40-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் மீது ஒருவர் என கீழே விழுந்து மரண ஓலமிட்டனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 20 பேர் நகை அடகுக்கடையின் மாடியிலும், அடகுக் கடையின் உள்ளேயும் சிக்கிக் கொண்டு மரண ஓலமிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. வேலூர் சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, திருவண்ணாமலை டவுன் டிஎஸ்பி குணசேகரன், ஆரணி காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணி, வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவசங்கரன், திருவண்ணாமலை நகர்மன்ற முன்னாள் தலைவர் இரா.ஸ்ரீதரன், அரசு வழக்குரைஞர் அருள்குமரன் ஆகியோர் வந்து மின்வாரிய ஊழியர்களை வரவழைத்து பழக்கடை, நகை அடகுக்கடைகளில் பாய்ந்த மின்சாரத்தை நிறுத்தினர்.

பிறகு கடையின் உள்ளேயும், முதல் மாடியிலும் சிக்கி மரண ஓலமிட்டும், அண்ணாமலையாரே என்னைக் காப்பாற்று என்று அழுதுகொண்டிருந்த 20-க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.

மீட்கப்பட்டவர்களில் சுமார் 8 பேர் 2 ஆம்புலன்ஸ் வாகனங்களில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் தேரோட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்ட தேரோட்டம் தொடங்கியது.

2-வது முறையாக 2 பேருக்கு மின்சாரம் பாய்ந்துயது:

மின்சாரம் பாய்ந்த இடத்தில் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மகா ரதம் அந்த மின்கம்பத்தை கடந்து சென்றதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, பழக்கடையின் எதிரே இருந்த மின்கம்பத்தைப் பிடித்த மேலும் 2 பேர் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தனர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் கீழே விழுந்தவர்களை மீட்டு அனுப்பி வைத்துவிட்டு பக்தர்களை எச்சரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com