'மாவட்ட நிர்வாகம் ஏமாற்றிவிட்டது' - பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினர் கைது

விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினர்.
Published on
Updated on
1 min read

விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 

காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அண்மையில் நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது.

இந்த அனுமதியைக் கண்டித்தும் அதுகுறித்து விளக்கம் பெறவும், சுப்பிரமணியன் என்பவர் தலைமையில் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினர், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சே.வெங்கடேசனை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டனர். 

அதற்கு மாவட்ட வருவாய் அலுவலர், நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்தார்.

இதனைத்  தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறி விமான நிலைய எதிர்ப்புக் குழுவினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமர்ந்து திடீரென தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 486 நாட்களாக தொடர்ந்து போராடி வரும் எங்களை மாவட்ட நிர்வாகம் ஏமாற்றிவிட்டது. நீர்வள ஆதாரம் கெடும் வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு நாங்கள் தொடர்ந்து பல ஆதாரங்கள் எடுத்து வைத்தும் எங்களை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. 'குடியிருப்புகளை பாதுகாப்போம். உங்களை கைவிடாமல் காப்பாற்றுகிறோம். உங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்' என்றெல்லாம் வாக்குறுதி தந்து விட்டு இப்போது நிலம் எடுக்க நிர்வாக அனுமதி வழங்கியிருப்பது எங்களுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. நாங்கள் எங்கள் நிர்வாகக் குழுவிடம் தொடர்ந்து பேசி அடுத்த கட்டப் போராட்டத்திற்கு தயாராவோம்" என்று கூறி கோஷங்கள் எழுப்பி ஆட்சியர் அலுவலகம் முன்பாக தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலியஸ் ஜீசஸ் தலைமையிலான காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரையும் கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com