

சென்னை: கனமழை எதிரொலியாக சென்னை உள்பட 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து, அடுத்த 5 நாள்களுக்கு மிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
இதையும் படிக்க | வங்கக் கடலில் புயல் உருவாவதில் தாமதம்!
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பகல் 1 மணிவரை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் கனமழை எதிரொலியாக சென்னை உள்பட 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். புயலை அடுத்து 14 கடலோர மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கரை திரும்பியதை உறுதி செய்ய வேண்டும். பழைய கட்டடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.