எழுத்தாளர் அம்பைக்கு டாடா வாழ்நாள் சாதனையாளர் விருது!

எழுத்தாளர் அம்பைக்கு டாடா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் அம்பைக்கு டாடா வாழ்நாள் சாதனையாளர் விருது!
Published on
Updated on
1 min read

தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளில் அம்பை குறிப்பிடத்தக்கவர். 1944ல் கோவையில் பிறந்த இவரது இயற்பெயர் சி.எஸ்.லட்சுமி. வரலாற்றாசிரியர். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நாற்பது ஆண்டுகளாகப் பெண்கள் வரலாறு, வாழ்க்கை பற்றிய ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.

பெண் எழுத்தாளர்கள், பெண் இசைக் கலைஞர்கள், பெண் நடனக் கலைஞர்கள் குறித்து இவர் மேற்கொண்ட ஆய்வுகள் ‘The Face Behind the Mask’ (தி ஃபேஸ் பிஹைண்ட் தி மாஸ்க்), ‘The Singer and the Song’ (தி சிங்கர் அண்ட் தி சாங்) என்னும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. பெண்ணியச் சிந்தனைகளையும், பெண்களின் மனங்களையும் வெளிப்படுத்தும் படைப்புகளை உருவாக்கியுள்ளார். 

‘சிறகுகள் முறியும்’ (1976), ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ (1988), ‘காட்டில் ஒரு மான்’ (2000), ‘வற்றும் ஏரியின் மீன்கள்’ (2007), ‘ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு’ (2013), அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு (2014) உள்ளிட்டவை இவரின் சிறுகதைகள். இவரின் கதைகள் ஆங்கிலத்தில் ‘A Purple Sea’ (தி பர்பிள் சீ), ‘In a Forest, A Deer’ (இன் ஏ ஃபாரஸ்ட், ஏ டீர்), உள்பட  ஐந்து தொகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இரோம் ஷர்மிளாவின் ‘Fragrance of Peace’(ஃப்ராகிரன்ஸ் ஆஃப் பீஸ்) கவிதைத் தொகுப்பைத் தமிழில் ‘அமைதியின் நறுமணம்’ (2010) என மொழிபெயர்த்திருக்கிறார்.

விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் விருது (2005), டொரான்டோ பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் இலக்கிய விருது (2008), தமிழக அரசின் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி (2011), சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்தில் உன்னதத்திற்கான விருது (2011), ’சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை’ சிறுகதைத் தொகுப்பிற்காக 2021 ஆம் ஆண்டுகிற்கான சாகித்ய அகாதெமி விருது ஆகியவற்றை பெற்றிருக்கிறார். 'ஸ்பாரோ' (SPARROW-Sound & Picture Archives for Research on Women) என்னும் பெண்கள் ஆவணக் காப்பகத்தை மும்பையில் 1988-இல் நிறுவி அதன் இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், அம்பைக்கு 2023 ஆம் ஆண்டிற்கான டாடா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அனிதா தேசாய், மார்க் டுல்லி, அமிதவ் கோஷ், ரஸ்கின் பாண்ட் மற்றும் கிரிஷ் கர்னாட் ஆகியோர் டாடா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com