
திருநெல்வேலி: குலவணிகர்புரம் ரயில்வே கேட் அருகே வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுகாதாரத் துறை ஊழியர் தெய்வநாயகம் பலியான நிலையில், அவரது உடலை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் ஜெயபிரகாஷ் என்ற ஜெயசீலன் மற்றொரு வாகனம் மோதி அதே இடம் அருகே பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.
ரயில் தண்டவாளத்தில் உடல் கிடந்ததினால் அந்த வழியாக வந்த திருச்செந்தூர் ரயில் சிறிது நேரம் குலவணிகர்புரம் ரயில்வே நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
நெல்லையில் உள்ள முக்கிய சந்திப்புகளில் ஒன்று குல வனிகர்புரம் ரயில்வே கேட். அம்பாசமுத்திரத்தில் இருந்து வரும் வாகனங்களும் நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் வாகனங்களும் இந்த ரயில்வே கேட் வழியாகத்தான் செல்ல வேண்டும்.
இதனால் இங்கு எப்பொழுதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கும்.
இதையும் படிக்க | ஆவினில் ரூ.450-க்கு தீபாவளி இனிப்புகள்
இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை சுகாதாரத் துணை இயக்குநர் அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த தெய்வநாயகம் என்பவர் குலவாணிக்கபுரம் ரயில்வே கேட் அருகே தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அம்பாசமுத்திரத்தில் இருந்து நெல்லை நோக்கி வந்த வாகனம் அவர் மீது மோதியது.
இதனால் அவர் குலவணிகர்புரம் ரயில்வே கேட்டில் உள்ள தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பலியானார்.
இதனை அடுத்து ஜேபி ஆம்புலன்ஸ் சர்வீஸ் சார்ந்த அதன் உரிமையாளர் ஜெயபிரகாஷ் என்ற ஜெயசீலன் உடலை மீட்பதற்காக அங்கு ஆம்புலன்ஸில் வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மற்றொரு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
குலவணிகர்புரம் ரயில்வே கேட் என்பது ஒரு முக்கியமான சந்திப்பு. இதன் அருகில் தான் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையும், அதேபோல் நெல்லையின் புறநகர் விரிவாக்க பகுதி முக்கிய குடியிருப்பு பகுதிகளும், அரசு பொறியியல் கல்லூரிகள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், ஐ.என்.எஸ் கட்டபொம்மன் கடற்படை ஆகியவற்றின் அலுவலகங்கள் இருப்பதினால் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது .
இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படுவதினால் அதில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இந்த பகுதி மக்களிடம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.