பேரவைத் தலைவர் மரபை மீறி செயல்படுகிறார்: இபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மரபை மீறி செயல்படுகிறார். புனிதமான இருக்கையில் உள்ளவர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி


சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மரபை மீறி செயல்படுகிறார். புனிதமான இருக்கையில் உள்ளவர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. புதன்கிழமை சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

திருச்சி மாவட்டம், முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில் பெண் ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்ட காவலர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அதிமுக, காங்கிரஸ் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தது. 

கவன ஈர்ப்புக்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில், குறிப்பாக பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். 

இந்த நிலையில், பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் தற்போது அமர்ந்துள்ள எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை, ஆர்.பி. உதயகுமாருக்கு வழங்கக்கோரி பத்து முறை நினைவூட்டு கடிதம் கொடுத்தும் இதுவரைக்கும் நடவடிக்கை இல்லை. 3 உறுப்பினர்களை நீக்கக்கோரிய கடிதம் மீதும் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என எப்பாடி பழனிசாமி பேசினார். 

இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் அப்பாவு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக, சட்டம் விதி என்ன சொல்கிறதோ அதன்படி தான் நடக்கிறேன். இந்த விவகாரத்தில் சட்டப்படியே நடக்கிறேன். வீம்புக்காக எதையும் செய்யவில்லை. ஒருவர் எந்த சின்னத்தில் வென்று பேரவைக்கு வருகிறாரோ அதே சின்னத்தில்தான் கடைசி வரை பார்ப்பேன் என விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் மரபை மாற்ற வேண்டாம் என இபிஎஸ் தொடர்ந்து பேசி வந்தார். அப்போது, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பேச முற்பட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து பேரவைத் தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து அதிமுக உறுப்பினர்கள் தர்னாவில் ஈடுபட்டதை அடுத்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு அப்பாவு உத்தரவிட்டதை அடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 

இந்த நிலையில், பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது,  சட்டபேரவையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை குறித்தும் 3 பேரவை உறுப்பினர் நீக்கம் தொடர்பாக கடிதம் கொடுத்து இதுவரை எந்த நடவடிக்கைளும் எடுக்கவில்லை. 

இது குறித்து பத்து முறை நினைவூட்டு கடிதம் கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரைக்கும் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. 

காங்கிரஸ் கட்சியில் 18 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தலைவர், துணைதலைவர் அனைவருக்கும் உரிய அங்கீகாரத்தை கொடுக்கின்றனர். ஆனால் எங்களுக்கு கொடுக்கவில்லை. 

அதிமுக சட்டப்பேரவை துணைத் தலைவரை முறைப்படி நியமிக்கப்படவும் இல்லை, உரிய இருக்கையையும் கொடுக்கவில்லை.  

பேரவையில் எந்த உறுப்பினரை எந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் என முடிவு செய்வது பேரவைத் தலைவரின் தனிப்பட்ட அதிகாரம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இதில், பேரவைத் தலைவர்  நடுநிலையோடு செயல்பட்டு எங்களது கோரிக்கையை ஏற்க வேண்டும்.

பேரவையில் பெரும்பாலான மக்கள் பிரச்னைகளுக்கான கேள்விகளுக்கு முதல்வரோ அல்லது துறைசார்ந்த அமைச்சர்களோ பதிலளிப்பதில்லை. மாறாக, பேரவைத் தலைவரே பேசிவிடுகிறார்.

ஆனால் எங்களுக்கு துறைசார்ந்த அமைச்சர் மற்றும் முதல்வரின் பதிலை பெறமுடியவில்லை என்று பழனிசாமி தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com