தமிழகத்துக்கு 16 நாள்களுக்கு 3,000 கன அடி நீர்: காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் அக்டோபர் 31-ஆம் தேதி வரை 16 நாள்களுக்கு தண்ணீரை விடுவிக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் புதன்கிழமை முடிவெடுக்கப்பட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் அக்டோபர் 31-ஆம் தேதி வரை 16 நாள்களுக்கு தண்ணீரை விடுவிக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் புதன்கிழமை முடிவெடுக்கப்பட்டது.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் (சி.டபிள்யு.ஆர்.சி.) 88-ஆவது கூட்டம் காணொலி வழியாக புதன்கிழமை நடைபெற்றது. குழுவின் தமிழக உறுப்பினரான திருச்சி காவிரி வடிநீர் கோட்டத் தலைமைப் பொறியாளர் எம். சுப்பிரமணியன், மூன்று மாநில உறுப்பினர்களான தலைமைப் பொறியாளர்கள் காணொலி வாயிலாகப் பங்கேற்றனர்.
தமிழக நீர்வளத் துறைச் செயலர் சந்தீப் சக்ஸேனா, தமிழக காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன், கர்நாடக நீர்வளத் துறைச் செயலர் ராகேஷ் சிங் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழக உறுப்பினர் கடுமையான வாதங்களை எடுத்துவைத்தார். "மேட்டூர் அணையில் 8 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளதால் வேளாண்மைக்கு நீர் சென்றடையாமல் பயிர்கள் கருகுகின்றன.
கர்நாடக அணைகளில் 53 சதவீதம் அளவில் 56 டிஎம்சி தண்ணீர் உள்ளது. இதுவரை தமிழகத்துக்கு 47 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 80 டிஎம்சிக்கு மேல் தண்ணீரை கர்நாடகம் தமிழகத்துக்குத் தரவேண்டும். இருப்பினும், தற்போதைய நீர் இருப்பு, நீர் வரத்தைக் கணக்கில்கொண்டு, பருவமழை தவறிய பற்றாக்குறை காலங்களுக்கு வழங்க வேண்டிய (20.75 டிஎம்சி) அளவிலான தண்ணீரையாவது வழங்கவேண்டும். இதன்படி விநாடிக்கு 16,000 கன அடி தண்ணீரை அக்டோபரில் மீதமுள்ள 15 நாள்களுக்கு வாடும் பயிர்களுக்கு வழங்க முன்வர வேண்டும்' என வாதிட்டார்.
கர்நாடக உறுப்பினர், "தற்போது கர்நாடக அணைகளில் உள்ள 50 சதவீத தண்ணீர் விவசாயம், குடிநீர்த் தேவைக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. கட்டுப்பாடற்ற நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து பிலிகுண்டுலு வந்தடையும் தண்ணீரைத் தவிர கர்நாடக அணைகளிலிருந்து எந்த விதமான தண்ணீரையும் விடுவிக்க முடியாது' என்று தெரிவித்தார்.
இந்த விவாதங்களுக்குப் பின்னர் சி.டபிள்யு.ஆர்.சி. தலைவர் வினித் குப்தா, "தமிழகத்தின் நிலையைக் கருதி, வருகிற அக்டோபர் 16 முதல் 31-ஆம் தேதி வரை 16 நாள்களுக்கு கர்நாடக அணைகளிலிருந்து விநாடிக்கு 3,000 கன அடி நீர் வீதம் தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.
புதுச்சேரிக்கு விநாடிக்கு 168 கன அடி நீரை இதே காலகட்டத்தில் தமிழகம் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 
குழுவின் அடுத்த கூட்டம், அக்டோபர் மாதம் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com