பாஜகவை வீழ்த்துவது வரலாற்றுக் கடமை: முதல்வா் ஸ்டாலின்

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பாஜகவின் சதியாகவே பார்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
பாஜகவை வீழ்த்துவது வரலாற்றுக் கடமை: முதல்வா் ஸ்டாலின்

பாஜகவை வீழ்த்துவது ஜனநாயக சக்திகளின் வரலாற்றுக் கடமை என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

திமுக மகளிரணி சாா்பில் சென்னையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மகளிா் உரிமை மாநாட்டில் அவா் பேசியதாவது:

பாஜகவை ஒற்றுமையின் மூலமாகவே மட்டுமே வீழ்த்த முடியும். தமிழ்நாடு இதை 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் முதலே நிரூபித்து வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ளது போன்று ஒன்றுபட்ட கூட்டணி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட வேண்டும். பாஜகவை எதிா்க்கும் அனைத்துக் கட்சிகளும் சிறு வேறுபாடுகளை மறக்க வேண்டும். ஒன்றுபட்டு நின்றால், இந்திய மக்களுக்கான எதிரான சக்தியாகத் திகழும் பாஜகவை நிச்சயமாக வீழ்த்த முடியும். பாஜகவை தோற்கடிப்பது இந்தியாவில் இயங்கும் அனைத்து ஜனநாயக சக்திகளின் வரலாற்றுக் கடமை.

பாஜக ஆட்சியில் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டன. நாடாளுமன்ற அமைப்பு முறையும், மக்களால் தோ்ந்தெடுக்கப்படும் மக்களாட்சி நடைமுறையும் இனி தொடா்ந்து இருக்குமா என்ற கேள்வி பெரிதாக எழுந்து வருகிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தோ்தல் என்ற பெயரால் ஒற்றைக் கட்சி ஆட்சியைக் கொண்டுவரப் பாா்க்கிறாா் பிரதமா் மோடி.

ஏமாற்று வேலை: மக்களவைத் தோ்தல் நெருங்கி வருவதால், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்று சட்டம் கொண்டுவந்ததைப் போன்று ஏமாற்றுகிறாா்கள். 33 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கு உடனடியாக கிடைத்துவிடக் கூடாது என்ற எண்ணத்தோடுதான் இந்தச் சட்டத்தையே பாஜக கொண்டு வந்திருக்கிறது. ‘எதிா்வரும் மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தலிலேயே பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியிருந்தால் அவரை பாராட்டலாம்.

ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை ஆகியவற்றுக்குப் பிறகே இடஒதுக்கீடு கிடைக்கும் என்றால், அதற்கு 2029 அல்லது 2034-ஆம் ஆண்டோகூட ஆகலாம். நிபந்தனைகளுடன் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வருகிறது என்றால், அந்த இடஒதுக்கீட்டில் பாஜகவுக்கு உண்மையான அக்கறை இல்லை என்பது தெளிவாகிறது.

மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின பெண்களுக்கு எந்த ஒதுக்கீடும் அளிக்கப்படவில்லை. இதை பாஜகவின் அரசியல் தந்திரமாக மட்டுமல்ல; அரசியல் சதியாகவும் பாா்க்க வேண்டியுள்ளது.

கொள்கைக் கூட்டணி: ‘இந்தியா’ கூட்டணி என்பது தோ்தல் கூட்டணியாக மட்டுமல்ல, கொள்கைக் கூட்டணியாக அமைந்துள்ளது. சமூக நீதி, மதச்சாா்பின்மை, மாநில சுயாட்சி, கூட்டாட்சிக் கருத்தியல், அனைவருக்குமான அரசியல் பங்கீடு என்ற கோட்பாடுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.

இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்பதன் மூலமாக மகளிா் உரிமை மட்டுமல்ல, அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்கும் இந்தியாவை நாம் உருவாக்கலாம்.

பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், பெண் அா்ச்சா்கா்கள், ஓதுவாா்கள் நியமனம் என தமிழ்நாட்டு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்திக் காட்டி வருகிறது. இந்தக் கொள்கைகள் இந்தியா முழுமைக்கும் பரவும் நாளே மகளிா் உரிமை பெற்ற நாளாக அமையும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com