தனியார் கோயிலில் உண்டியல் வைப்பதா? -இந்து அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு!

இந்து சமய அறநிலைத்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோயிலுக்கு பாத்தியப்பட்ட சாத்தந்தை குலத்தினர் திங்கள்கிழமை ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
தனியார் கோயிலில் உண்டியல் வைக்க முயற்சிக்கும் இந்து அறநிலையத்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளிக்க ஊர்வலமாக வந்த கொங்கு வேளாள கவுண்டர்கள் சமுதாயத்தின் சாத்தந்தை குலத்தினர்.
தனியார் கோயிலில் உண்டியல் வைக்க முயற்சிக்கும் இந்து அறநிலையத்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளிக்க ஊர்வலமாக வந்த கொங்கு வேளாள கவுண்டர்கள் சமுதாயத்தின் சாத்தந்தை குலத்தினர்.


ஈரோடு: ஈரோட்டை அடுத்த தென்முகம் வெள்ளோடு பகுதியில் சாத்தந்தை குலத்தினருக்கு சொந்தமான ராசா சுவாமி நல்ல மங்கையம்மன் கோயிலில் உண்டியல் வைக்க முயற்சி செய்த இந்து சமய அறநிலைத்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோயிலுக்கு பாத்தியப்பட்ட சாத்தந்தை குலத்தினர் திங்கள்கிழமை ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

ஈரோட்டை அடுத்த தென்முகம் வெள்ளோடு பகுதியில் ராசா சுவாமி நல்ல மங்கையம்மன் கோயிலை குலதெய்வமாக கொண்டு சாத்தந்தை குலத்தினர் வழிபட்டு வருகின்றனர்.

சாத்தந்தை குல மக்களிடம் மட்டுமே நன்கொடையாக பெற்று இந்த குலதெய்வ கோயில் அமைந்துள்ளதாகவும் பல ஆண்டுகளாக இந்த கோயிலை தங்கள் குல மக்கள் தான் பராமரித்து வருவதாகவும் சாத்தந்தை குலத்தினர் கூறுகின்றனர்.

இந்நிலையில், இந்த கோயிலில் கடந்த 13 -ஆம் தேதி இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் உண்டியல் வைக்க முயற்சி செய்ததாக தெரிகிறது. இந்த கோயிலுக்கும் இந்து சமய அறநிலைத்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக்கூறி இந்த கோயிலுக்கு பாத்தியப்பட்ட சாத்தந்தை குலத்தினர் திங்கள்கிழமை ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர்.

இந்து சமய அறநிலைத்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளிக்க சாத்தந்தை குல மக்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் முத்துசாமி தலைமையில் ஊர்வலமாக வரும் சாத்தந்தை குலத்தினர்.

ஈரோடு கொங்கு கலை அரங்கில் கூடிய கொங்கு வேளாள கவுண்டர்கள் சமுதாயத்தின் சாத்தந்தை குலத்தினர் ஊர்வலமாக சென்று சாத்தந்தை குல மக்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் முத்துசாமி தலைமையில் செயலாளர் என்.டி.கண்ணுசாமி, பொருளாளர் கே.டி.பொன்னுச்சாமி, துணைத் தலைவர் நடராஜன், துணைச் செயலாளர்கள் திருமூர்த்தி, தர்மலிங்கம்,  கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை தலைவர் மணி கவுண்டர்,  முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.பழனிசாமி, மொடக்குறிச்சி அதிமுக ஒன்றியச் செயலாளர் கதிர்வேல், கொங்கு வேளாளர் அறக்கட்டளை பேரவை தலைவர் ராஜமாணிக்கம் உட்பட சாத்தந்தை குலத்தை சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.

இதுகுறித்து சாத்தந்தை குலத்தின் நிர்வாகிகள் கூறுகையில், தென்முகம் வெள்ளோடு ராசாசுவாமி நல்ல மங்கையம்மன் கோயிலை சாத்தந்தை குலத்தின் குலதெய்வமாக வழிபட்டு வருகிறோம். எங்கள் கோயிலுக்கும் இந்துசமய அறநிலைய துறைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

தனியார் கோயில் விவகாரங்களில் இந்து சமய அறநிலையத்துறை தலையிடக்கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால் இந்த உத்தரவையும் மீறி இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் எங்கள் குலதெய்வமாகிய ராசா சுவாமி நல்ல மங்கையம்மன் கோயிலில் உண்டியல் வைக்க முயற்சித்து வருகிறார்கள்.

இது எங்கள் குல மக்களின் உணர்வுகளையும் குல வழக்கத்தையும் புண்படுத்துவதாக உள்ளது. எனவே இதுபோன்ற நடவடிக்கைகளில் இந்து அறநிலையத்துறையினர் ஈடுபடுவதை முற்றிலுமாக தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com