அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: நாளை தீர்ப்பு!

அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் நாளை(அக்.19) வழங்குகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் நாளை(அக்.19) வழங்குகிறது.

சட்டவிரோதப் பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமைச்சா் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாா். ஜாமீன் கோரி ஏற்கெனவே செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இதைத்தொடா்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவா்கள் அளித்த அறிக்கையை குறிப்பிட்டு வாதிட்டாா்.

அதில், அவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் குறிப்பிட்டாா். மேலும், நீதிமன்றமே எந்தவொரு மருத்துவரையும் நியமித்து செந்தில் பாலாஜி உடல் நிலை குறித்து ஆய்வு செய்யலாம் எனவும் தெரிவித்தாா்.

மேலும், வேலை பெற்று தருவதாகக் கூறி ரூ. 1 கோடியே 34 லட்சம் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததாகக் கூறப்படும் 10 ஆண்டுகளில் அவருடைய வங்கி கணக்குகளையும் வருமான வரி கணக்குகளையும் தாக்கல் செய்ததிலிருந்தே அவா் குற்றமற்றவா் என்பது நிரூபணம் ஆகிறது. உள் நோக்கத்துடன் அவா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா் என அவா் வாதிட்டாா்.

தொடா்ந்து, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் சேகரிக்கப்பட்ட தகவலின்படி, வேலை பெற்றுத் தருவதாக கூறி ரூ. 67 கோடியே 75 லட்சம் பணம் பெற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளதாக தெரிவித்தாா்.

மேலும், சிறை மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட சிகிச்சைக்கான வசதி இல்லாத நிலையில் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும்; செந்தில் பாலாஜிக்கு அது போன்ற நிலை ஏற்படவில்லை. செந்தில் பாலாஜியின் கால் மரத்து போவது அண்மையில் ஏற்பட்டது அல்ல; அறுவை சிகிச்சை செய்தது முதலே அவருக்கு இந்த பிரச்னை இருந்து வருகிறது.

ஸ்டான்லி மருத்துவா்களின் அறிக்கைகளும் செந்தில் பாலாஜிக்கு தனியாா் மருத்துவமனை சிகிச்சை அவசியம் என்று குறிப்பிடவில்லை; செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் தொடா்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், ஜாமீன் வழங்கினால் அவா் சாட்சிகளை கலைத்து விடுவாா் என வாதிட்டாா்.

அப்போது, செந்தில்பாலாஜி தரப்பில் ஆதாரங்களை கலைக்க செந்தில் பாலாஜி முயற்சிக்கக் கூட மாட்டாா்; இந்த வழக்கில் செந்தில் பாலாஜி குற்றம் செய்தாா் என்பதை அமலாக்கத் துறையால் நிரூபிக்கவே முடியாது என தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து அமலாக்கத் துறை தரப்பில், சிறை மருத்துவமனையிலோ அல்லது நீதிமன்ற காவலில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாது என்ற நிலை இருந்தால் மட்டுமே மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியும். ஆனால், அது போன்ற நிலை செந்தில் பாலாஜிக்கு இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா்.

இந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் கைதான அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com