நவ. 9-ல் லாரிகள் வேலை நிறுத்தம்: சம்மேளனம் அறிவிப்பு

சாலை வரி, காலாண்டு வரி, ஆன்லைன் அபராதம் விதிப்பை முழுமையாக ரத்து செய்யக்கோரி, நவ. 9-ஆம் தேதி லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
நாமக்கலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சி.தனராஜ்.
நாமக்கலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சி.தனராஜ்.

நாமக்கல்: சாலை வரி, காலாண்டு வரி, ஆன்லைன் அபராதம் விதிப்பை முழுமையாக ரத்து செய்யக்கோரி, நவ. 9-ஆம் தேதி லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தை தொடர்ந்து சம்மேளன தலைவர் சி.தனராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சாலை வரி, காலாண்டு வரி அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. காவல்துறையால் ஆன்லைன் அபராதம் தொடர்ந்து விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் லாரி தொழிலை நடத்த முடியாத நிலைக்கு அதன் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அண்மையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் கோரிக்கைகளை முன்வைத்தோம். அவர் முதல்வருடன் கலந்தாலோசித்து நல்ல முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார். ஆனால் இதுவரை எந்த தகவலும் இல்லை.

அதனால் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நவம்பர் 9 ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். இந்த போராட்டத்தில் அனைத்து மாவட்ட லாரி உரிமையாளர்களும் பங்கேற்கின்றனர். அன்று ஒரு நாள் மட்டும் ரூ. 30 கோடி வரையில் லாரி உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்படும். சுமார் 6 லட்சம் லாரிகள் வரை இயங்காது. வெளிமாநில லாரிகளும் தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது. இந்த போராட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள உள்ளோம்.

நவ.25-ல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய அளவிலான வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைமை முடிவு செய்து இருக்கிறது என்றார்.

இந்த பேட்டியின்போது மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com