
திருச்சி: ஆய்வாளர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் பயன்தரும் வகையிலான சங்க இலக்கிய உரைவேறுபாட்டுக் களஞ்சியம் பிப்ரவரியில் வெளியிடப்படவுள்ளது.
20 தொகுதிகளுடன், 7500 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகங்களை நியு செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிடுகிறது. தமிழக வரலாற்றில் முதன்முறையாக எட்டுத்தொகை, பத்துப் பாடல்கள் குறித்த தரவுகளை 10 ஆண்டுகளுக்கு மேலாக திரட்டிய 8 ஆசிரியர்களின் உழைப்பில் இந்த களஞ்சியம் உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக, புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக தமிழ்த்துறைத் தலைவர் இரா. அறவேந்தன், நியு செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாண் இயக்குநர் க. சந்தானம், பதிப்புத்துறை பொதுமேலாளர் சண்முகம் சரவணன் ஆகியோர், திருச்சியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
1834 ஆம் ஆண்டு தொடங்கி தற்போதைய காலம் வரையில் சங்க இலக்கியத்துக்கான பங்களிப்பை அளித்த அனைத்து ஆளுமைகளையும் சிறப்பிக்கும் வகையில் சங்க இலக்கிய உரைவேறுபாட்டுக் களஞ்சியம் உருவாக்கப்பட்டுள்ளது. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, திருமுகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநெல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய 18 நூல்களும் தொகுக்கப்பட்டு அகநானூறுக்கு மட்டும் கூடுதலாக 2 தொகுதிகள் சேர்த்து மொத்தம் 20 தொகுதிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | யார் இந்த கார்த்திகேயன் பாண்டியன்? ஒடிசாவில் தமிழ்ப் புயல்!
பாடல், பாட வேறுபாடு, உரை எழுதப்பட்ட காலம், உரை ஒப்பீடு, விளக்கம், உரை வேறுபாடு, பொருத்தமானவை, பாடல் கருத்து, அருஞ்சொற்பொருள், விரிவான ஆய்வு முன்னுரை ஆகியவை இடம் பெற்றுள்ளன. 35 ஆயிரம் பக்கங்களில் அடங்கக் கூடியவற்றை 7,500 பக்கங்களுக்குள் கொண்டு வந்து அச்சிடப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றில் இதுபோன்ற தரவுகளுடன் சங்க இலக்கியத்துக்கு இதுவரை நூல்கள் வெளியாகவில்லை. முதன்முறையாக வெளியிடப்படும் இந்த சங்க இலக்கிய உரைவேறுபாட்டுக் களஞ்சியமானது ஆராய்ச்சியாளர்கள், ஆய்வாளர்கள், கல்வெட்டியியல், தொல்லியியல், நாணயவியல், ஆசிரியர்கள், மாணவர்கள், வாசகர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் உதவிடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அச்சிடும் முன்பாக 125 முறைகளுக்கு மேலாக முன்மதிப்பீடு செய்யப்பட்டு தமிழ் ஆளுமைகள் பலர் அளித்த கருத்துக்களையும் உள்ளடக்கி மேம்படுத்தப்பட்டுள்ளது. இலக்கியம், இலக்கிய வாசிப்பு தளத்தில் இயங்கும் அனைவருக்குமானது. உலகின் செம்மொழிகளான 6 மொழிகளில் இன்றும் பேசப்படும் மொழியாக உள்ள தமிழுக்கும் மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலான தமிழகத்தின் அறிவு வரலாற்றை பதிவு செய்துள்ளோம். இந்த நூல் ஆசிரியர்கள் அனைவரும் ஏற்கெனவே சங்க இலக்கியத்தின் பதிப்பு வரலாற்றை பதிவு செய்தவர்கள். களஞ்சியத்துக்கான முன்வெளியீட்டுத் திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை முன்வெளியீடுத் திட்டம் அமலில் இருக்கும். இந்த காலத்தில் முன்பதிவு செய்யும் நபர்களுக்கு ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள களஞ்சியமானது ரூ.5,500 விலையில் வழங்கப்படும். பிப்ரவரி மாத இறுதியில் இந்த களஞ்சியம் வெளியிடப்படும் என்றனர்.
பேட்டியின்போது, நூல் ஆசிரியர்கள் க. பாலாஜி, இரா. அறவேந்தன், ம. லோகேஸ்வரன், இரா. மகிழேந்தி, மு. முனீஸ்மூர்த்தி, மா. பரமசிவன், அ. செல்வராசு, நித்தியா அறவேந்தன் ஆகிய 8 பேரும் அறிமுகம் செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.