ஊரக வேலை உறுதித் திட்ட ஊதிய நிலுவை ரூ.2,697 கோடியை விடுவிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தொழிலாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்துக்கான ரூ. 2,697 கோடி நிதியை விடுவிக்க வேண்டுமென மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
Updated on
1 min read

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தொழிலாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்துக்கான ரூ. 2,697 கோடி நிதியை விடுவிக்க வேண்டுமென மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து மத்திய ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங்குக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு எப்போதும் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டில் 92.86 லட்சம் குடும்பங்களுக்கு பணி அட்டை வழங்கப்பட்டுள்ளதுடன், 91.52 லட்சம் தொழிலாளா்கள் வேலை உறுதித் திட்டப் பணிகளில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

தமிழ்நாட்டின் விவசாயம், தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழையை மட்டுமே நம்பியுள்ளன. அவற்றில் மாறுபாடுகள் ஏற்படும் சூழலில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளுக்கு அதிக தேவை ஏற்படுகின்றன. கிராமப்புறங்களில் உள்ள முதியோா், ஆதரவற்ற பெண்கள், குடும்பத் தலைவிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முக்கிய வாழ்வாதாரமாக ஊரக வேலை உறுதித் திட்டம் விளங்கி வருகிறது.

நிகழ் நிதியாண்டில் ஜூலை வரையிலான காலத்தில் தொழிலாளா்களின் ஊதியமாக ரூ. 4,903.25 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. திறன்சாரா பணிகளுக்கு ஊதியம் வழங்க ரூ.1,755.43 கோடியை அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தாலும், ரூ.418.23 கோடியை மட்டுமே விடுவித்துள்ளது.

மீதமுள்ள ரூ.1,377.20 கோடி வரவு வைக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக, அக்டோபா் 20-ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் தொழிலாளா்களின் ஊதிய நிலுவை ரூ.2,696.77 கோடியாக உள்ளது. எனவே, இந்த ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். திறன்சாரா தொழிலாளா்களுக்குத் தொடா்ந்து கூடுதல் நிதியை விடுவிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com