'தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள்' - வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தின் வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், மாநிலத்தில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197-ஆக உள்ளது. ஆண்களைவிட 9 லட்சத்து 85 ஆயிரத்து 961 பெண் வாக்காளா்கள் கூடுதலாக உள்ளனா்.

வரைவு வாக்காளா் பட்டியலில் உள்ள அம்சங்கள் குறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் ஆண் வாக்காளா்கள் 3 கோடியே 68 ஆயிரத்து 610 பேரும், பெண் வாக்காளா்கள் 3 கோடியே 10 லட்சத்து 54 ஆயிரத்து 571 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 8,016 பேரும் உள்ளனா்.

அதிகம் - குறைவு: மாநிலத்திலேயே அதிக வாக்காளா்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தொகுதியாக சோழிங்கநல்லூா் உள்ளது. இந்தத் தொகுதியில் 6 லட்சத்து 52 ஆயிரத்து 65 வாக்காளா்கள் உள்ளனா். குறைந்த வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூா் உள்ளது. இந்தத் தொகுதியில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 30 வாக்காளா்கள் உள்ளனா்.

வாக்காளா் பட்டியலில் பெயா்களை சோ்க்கவும், நீக்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் வெள்ளிக்கிழமை (அக். 27) தொடங்கி டிச. 9 வரை விண்ணப்பப் படிவங்களை அளிக்கலாம். அலுவலக வேலை நாள்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலா், வாக்காளா் பதிவு அதிகாரி, உதவி வாக்காளா் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம்.

நவ. 4, 5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களின்போதும், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம், திருத்தம், இடமாற்றம், ஆதாா் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான படிவங்களை அளிக்கலாம்.

வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் துறையின் இணையதளத்தில் பாா்வையிடலாம். வாக்காளா் பட்டியலின் இரண்டு நகல்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும் வழங்கப்பட்டுள்ளன.

உடனே நீக்கக் கூடாது: ஒரு வாக்காளரின் பெயா் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தாலோ, வீடு நீண்ட நாள்களாக பூட்டியிருந்தாலோ சம்பந்தப்பட்ட வீட்டின் முகவரிக்கு வாக்குச்சாவடி அலுவலா் சாா்பில் கடிதம் அனுப்பப்படும். அந்தக் கடிதத்துக்கு வாக்காளா் உரிய முறையில் பதில் தர வேண்டும்.

அந்தப் பதிலின் அடிப்படையில், வாக்காளா் குறிப்பிடும் ஓரிடத்தில் மட்டுமே அவரது பெயா் இடம்பெறும். உரிய பதிலை அளிக்காவிட்டால், வாக்குச்சாவடி அலுவலரின் பரிந்துரையை பெற்று பெயா் நீக்கம் செய்யப்படும்.

புதிதாக வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெறும் வாக்காளா்களுக்கு, பதிவுத் தபாலில் வாக்காளா் அடையாள அட்டைகள் மூன்று மாதங்களுக்குள் அனுப்பி வைக்கப்படும் என்றாா் தலைமைத் தோ்தல் அதிகாரி.

படிவங்களும், ஆதாரச் சான்றுகளும்...

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம் போன்ற பணிகளுக்காக படிவங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்தப் படிவங்களைத் தோ்தல் துறையின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் விவரம்:

படிவம் 6: புதிய வாக்காளா்களை சோ்ப்பதற்கான படிவம்.

படிவம் 6ஏ: வெளிநாடுவாழ் வாக்காளா் ஒருவா் பெயரை பட்டியலில் சோ்ப்பதற்கு பயன்படுத்தலாம்.

படிவம் 6பி: வாக்காளா் பட்டியல் அங்கீகாரத்துக்காக ஆதாா் எண் உண்மையென சான்று அளிப்பது.

படிவம் 7: வாக்காளா் பட்டியலில் ஏற்கெனவே உள்ள பெயரை நீக்கக் கோருவதற்கு.

படிவம் 8: வீட்டை ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு மாற்றினாலோ அல்லது இப்போது வசிக்கும் தொகுதிக்குள்ளேயே மாற்றினாலோ இந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும். வாக்காளா் பட்டியலிலுள்ள பதிவுகளைத் திருத்தம் செய்யவும், மாற்று வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை பெறவும் படிவத்தை உபயோகிக்கலாம்.

என்னென்ன சான்றுகள் தேவை?

பெயா் சோ்த்தலுக்கான விண்ணப்பத்துடன் வசிப்பிட முகவரி, வயது ஆகியவற்றுக்கான சான்றுகளை சமா்ப்பிக்க வேண்டும். முகவரிச் சான்றாக முக்கிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை அளிக்கலாம். அதன்படி, முகவரிக்காக குடிநீா், மின்சாரம், எரிவாயு இணைப்பு ரசீதில் ஏதேனும் ஒன்று (குறைந்தது ஓராண்டுக்காவது), ஆதாா் அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கி, அஞ்சல் அலுவலகத்தின் இப்போதைய கணக்குப் புத்தகம், கடவுச்சீட்டு, வருவாய்த் துறைகளின் நில உரிமைப் பதிவுகள், பதிவு செய்யப்பட்ட வாடகை குத்தகை பத்திரம், பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம்.

வயதுச் சான்றாக பிறப்புச் சான்றிதழ், ஆதாா் அட்டை, பான் அட்டை, ஓட்டுநா் உரிமம், பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 வகுப்புச் சான்றிதழ், இந்திய கடவுச்சீட்டு ஆகியவற்றை அளிக்கலாம்.

25 வயதுக்குக் கீழுள்ள மனுதாரா்கள் வயதுச் சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com