கீழ்வேளூரில் வர்த்தகர் சங்கத்தினர் சாலை மறியல்!

கீழ்வேளூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து வர்த்தக சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கீழ்வேளூர் வர்த்தகர் சங்கத்தினர்.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கீழ்வேளூர் வர்த்தகர் சங்கத்தினர்.

கீழ்வேளூர்: கீழ்வேளூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து வர்த்தக சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.1700 கோடி மதிப்பில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நாகை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, கீழ்வேளூர் பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பழைய குழாய்களை அகற்றி புதிய ராட்சத குழாய்கள் அமைக்கும் பணிகளும், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சாலையின் இருபுறமும் தோண்டப்படும் பள்ளங்கள் சரியாக மூடப்படாத காரணத்தால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கீழ்வேளூர் - கச்சனம் சாலையில் ஒரு மாத காலமாக சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மண் திட்டுகள் உள்ளதால் மழை காலங்களில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமமடைந்து வருகின்றனர். கடைகளை திறக்க முடியாமல் வணிகர்களும் வியாபாரம் தொய்வடைந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். 

இதுகுறித்து கடந்த ஒருமாத காலமாக கீழ்வேளூர் வர்த்தகர் சங்கத்தினர், நாகை மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய பதில் கிடைக்காத நிலையில் வர்த்தகர்கள் கீழ்வேளூர் கடைத்தெருவில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தோண்டப்பட்ட பள்ளங்களை மூடும் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகளை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வர்த்தகர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

வர்த்தகர்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com