தஞ்சை ஜி.கிருஷ்ணன் மறைவு: முத்தரசன் இரங்கல்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்ட முன்னணித் தலைவர்களில் ஒருவருமான ஜி. கிருஷ்ணன் (81) புதன்கிழமை அதிகாலை தஞ்சாவூர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் காலமானார்.
ஜி. கிருஷ்ணன்
ஜி. கிருஷ்ணன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்ட முன்னணித் தலைவர்களில் ஒருவருமான ஜி. கிருஷ்ணன் (81) புதன்கிழமை அதிகாலை தஞ்சாவூர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் காலமானார். அவரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 
திருநெல்வேலி மாவட்டம், ரங்கசமுத்திரம் என்ற ஊரை பூர்வீகமாக கொண்டவர் ஜி.கிருஷ்ணன். ஆன்மீக நம்பிக்கையும், பழைமை பிடிப்பும் கொண்ட குடும்பத்தில் கணபதி - நாராயணியம்மாள் தம்பதிகளுக்கு இரண்டு சகோதர்கள், நான்கு சகோதரிகளுடன் பிறந்தவ. இளங்கலை (பொருளாதாரம்) பட்டப் படிப்பு முடித்ததும் கால்நடைத்துறையில் தட்டச்சர் மற்றும் உதவியாளராக அரசுப் பணியில் சேர்ந்தவர்.

பழைய வட ஆற்காடு மாவட்டத்தில், அரசுப் பணியில் இருந்து தஞ்சாவூருக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். அவர் தஞ்சாவூர் வந்த பிறகும், தஞ்சாவூரில் பணியில் இருந்தவருக்கு விடுவிப்பு உத்தரவு கிடைக்காதால் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்காக தஞ்சாவூர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாவட்டச் செயலாளர் மா.காத்தமுத்துவை அணுகி, கட்சி அலுவலகத்தில் தங்கினார்.

கட்சி அலுவலகத்தில் தங்கிய ஜி.கிருஷ்ணன், கட்சி அலுவல் தொடர்பான ஆவணங்களை தட்டச்சு செய்யத் தொடங்கி, தோழமை நிறைந்த உறவுகளால் ஈர்க்கப்பட்டு அரசுப் பணியை துறந்து கட்சியின் முழுநேர ஊழியரானார். அப்போது தொடங்கிய கட்சி வாழ்க்கையை அவரது இறுதி மூச்சு வரை மேற்கொண்டுள்ளார். அவரது கட்சி வாழ்க்கை முறை முன்னுதாரணமாக அமைந்துள்ளது. அவர் தேர்ந்தெடுத்த பாதையில் சலனமோ, தயக்கமோ இல்லாமல் மிகுந்த நம்பிக்கையோடு பயணித்தவர்.

கிருஷ்ணன் கட்சியின் தஞ்சாவூர் நகரச் செயலாளர், மாவட்ட நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர், மாநிலக் குழு உறுப்பினர் மற்றும் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் என பல நிலைகளில் பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டவர்.

தஞ்சாவூர் மாவட்ட ஏஐடியூசி தொழிற்சங்க பொதுச் செயலாளர், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் என பல்வேறு அரங்கப் பணிகளில் முத்திரை பதித்த பணிகளில் ஈடுபட்டவர்.

கறந்தை தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட இலக்கிய அமைப்புகளுடனும், வாசகர் வட்டங்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்து பல்வேறு கருத்தோட்டம் கொண்டவர்களோடும் இணக்கமான நட்பு கொண்டு இருந்தவர்.

கடந்த 1968 ஆம் ஆண்டு கீழ் வெண்மணியில் பட்டியல் சாதிப் பிரிவை விவசாயத் தொழிலாளர்கள் 44 பேர், சாதிவெறி ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு கணபதியா பிள்ளை ஆணையம் அமைத்தது.  

விவசாயத் தொழிலாளர் ஊதிய நிலை குறித்து ஆய்வு செய்த கணபதியா பிள்ளை விசாரணை ஆணையத்துக்கு மா.காத்தமுத்து, ஏ.எம்.கோபு, டி.ஆறுமுகம்  உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கை தயாரித்த போது ஜி.கிருஷ்ணன் பெரும் பங்களிப்பு செய்துள்ளார். 

எழுத்து வன்மையும், பேச்சு திறனும் கொண்ட ஜி. கிருஷ்ணன், திருமணம் செய்து கொண்டு, இல்லற வாழ்க்கை ஏற்கவில்லை. அவர்  விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களோடு இரண்டறக் கலந்து வாழ்ந்து வந்தார். அவர் மீது ஆயிரக்கணக்கான மக்கள் மாறாத பாசம் கொண்டு “ஜிகே” என அன்போடு அழைத்து வந்தனர்.

அர்த்தம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து காட்டிய ஜி.கிருஷ்ணன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செவ்வணக்கம் கூறி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com