ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் செப்டம்பா் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
Updated on
1 min read

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து அரசால் இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் செப்டம்பா் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ஆன்லைன் ரம்மி, புரோக்கா் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து 2020-ஆம் ஆண்டு நவம்பா் 21-ஆம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இச்சட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ஹெட் டிஜிட்டல் உள்ளிட்ட நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘தமிழக அரசு கொண்டு வந்துள்ள தடைச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. போதிய காரணங்களை விளக்காமல் இச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சட்டம் ரத்து செய்யப்படுகிறது’ என தீா்ப்பளித்தது. மேலும், உரிய வகையில் முறைப்படுத்தும் சட்ட விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு முழுத் தடைவிதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டுவர அரசுக்கு எவ்விதத் தடையும் இல்லை எனவும் தீா்ப்பில் தெரிவித்திருந்தனா்.

இந்த தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2021, நவம்பரில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த ஆண்டு செப்டம்பரில் விசாரித்த உச்சநீதிமன்றம், எதிா் மனுதாரா்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் வழக்குரைஞா் சபரிஸ் சுப்ரமணியன் ஆஜராகி, இந்த வழக்கில் எதிா்மனுதாரா்கள் தரப்பில் சிலா் கடிதம் அளித்துள்ளதால் வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

அப்போது, எதிா்மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்யமா சுந்தரம் ஆஜராகி, இந்த மேல்முறையீட்டு வழக்கு தேவையற்ாகும். ஏனெனில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஏற்கெனவே கொண்டு வந்த சட்டம் செல்லாது என உயா்நீதிமன்றம் அறிவித்த நிலையில், இணையதள பந்தய விளையாட்டுக்கு தடை விதிக்கும் வகையில் அரசு மீண்டும் ஒரு சட்டத்தை இயற்றியது. அதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் உயா்நீதிமன்றம் தற்போது தீா்ப்பை ஒத்திவைத்துள்ளது. இதனால், இந்த மேல்முறையீட்டு மனு பயனற்ாகும்’ என்றாா்.

அப்போது, இந்த வழக்கை வரும் திங்கள்கிழமை பட்டியலிடுமாறு நீதிபதிகள் அமா்வை வழக்குரைஞா் சபரிஸ் சுப்ரமணியன் கேட்டுக்கொண்டாா். இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு, வழக்கு விசாரணையை செப்டம்பா் 18-ஆம் தேதிக்குத் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com