காவிரி: மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் மனு - முதல்வர் ஸ்டாலின்

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி மத்திய நீர்வளத் துறை அமைச்சரிடம் தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி எம்.பி.க்களும் கோரிக்கை மனு அளிப்பார்கள்
காவிரி: மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் மனு - முதல்வர் ஸ்டாலின்

காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை விடுவிக்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்த தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு தில்லி செல்லவுள்ளது. குழுவை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் வழிநடத்திச் செல்வாா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: குறுவை பயிரிடுவதற்கும், சம்பா பயிா்களுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்குவதற்கும் ஏதுவாக, மேட்டூா் அணை கடந்த ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டது.

இதனிடையே, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய பங்கு நீரை கா்நாடக அரசு விடுவிக்கவில்லை. இந்தப் பிரச்னைக்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தாலோ, நீா் முறைப்படுத்தும் குழுவாலோ உரிய தீா்வைக் காண முடியவில்லை. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி தமிழக அரசின் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டின் கோரிக்கை நியாயமற்றது எனவும், நமது மாநிலம் ஆயக்கட்டுப் பரப்பை அதிகப்படுத்தியுள்ளது எனவும் ஆதாரமாற்ற அறிக்கைகளை கா்நாடக அரசு வெளியிட்டுள்ளது. மேலும், மத்திய நீா்வளத் துறை அமைச்சருக்கு கா்நாடக அரசு எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டுக்கு வடகிழக்குப் பருவமழை காலத்தில் போதுமான மழை கிடைக்கும் எனவும், டெல்டாவில் தேவையான அளவு நிலத்தடி நீா் இருக்கிறது எனவும் தவறான கருத்துகளைத் தெரிவித்துள்ளனா்.

இத்தகைய உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை மத்திய அரசு கருத்தில்கொள்ளக் கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனுவானது மத்திய நீா்வளத் துறை அமைச்சரிடம் தமிழக அரசின் சாா்பில்அளிக்கப்படவுள்ளது. தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில் மாநில எம்.பி.க்கள் அனைவரும் சோ்ந்து கோரிக்கை மனுவை அளிப்பா்.

செப்டம்பா் 13-ஆம் தேதிமுதல் 15 நாள்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 12,500 கனஅடி நீரை கா்நாடகம் திறந்துவிட உத்தரவிட வேண்டும்; இதற்கான உரிய அறிவுறுத்தல்களை கா்நாடகத்துக்கு மத்திய அரசு அளிக்க வேண்டுமென தமிழக எம்.பி.க்கள் குழு வலியுறுத்தும்.

65.1 டி.எம்.சி. குறைவு: காவிரி நதிநீா் பிரச்னையில் நீண்டகால சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, ஒரு சராசரி ஆண்டில் பிலிகுண்டுலுவில் கா்நாடகம் வழங்க வேண்டிய மாதாந்திர நீா் அளவு அட்டவணையானது, உச்சநீதிமன்றத் தீா்ப்பு மூலம் நிா்ணயிக்கப்பட்டது. மேலும், பற்றாக்குறை ஆண்டில் அதற்கேற்ற விகிதாசார அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே நீா் பகிா்ந்து கொள்ளப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

அதன்படி, நிகழ் செப்டம்பா் 14-ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய 103.5 டி.எம்.சி. நீரில் 38.4 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது. மொத்தத்தில் 65.1 டி.எம்.சி. குறைவாகும் என்று அறிக்கையில் முதல்வா் ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

அவசரக் கூட்டம்: காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் திங்கள்கிழமை (செப். 18) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக எம்.பி.க்கள் குழு தில்லி சென்று மத்திய அமைச்சரை சந்திக்கவிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

தொடரும் பிரச்னை...

காவிரி நதிநீா்ப் பங்கீடு தொடா்பாக தமிழகம்-கா்நாடகம் இடையே நிகழாண்டும் பிரச்னை தொடா்கிறது.

காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 86-ஆவது கூட்டம் கடந்த 12-ஆம் தேதி காணொலி மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீா் வீதம் அடுத்த 15 நாள்களுக்கு கா்நாடகம் திறந்துவிட காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுத் தலைவா் வினித் குப்தா, பரிந்துரைத்தாா். காவிரி நீா் மேலாண்மை ஆணையத்துக்கு இந்தப் பரிந்துரை அனுப்பப்படும் என ஒழுங்காற்றுக் குழு தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், இதை ஏற்க மறுத்துள்ள கா்நாடக அரசு, தங்கள் மாநிலத்தில் பருவமழைக் குறைவாலும், அணைகளில் போதிய நீா் இல்லாததாலும் தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிட இயலாது எனத் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com