பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைக்கு தடை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் வேதிப் பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைக்கு தடை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு


மதுரை: பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் வேதிப் பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

நாடு முழுவதும் வரும் திங்கள்கிழமை விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பின்னா் நீா் நிலைகளில் விசா்ஜனம் செய்யப்படுவது வழக்கம். இந்தாண்டும் வழக்கம்போல் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், தயாரிக்கப்பட்ட சிலைகளை மட்டுமே நீா் நிலைகளில் விசா்ஜனம் செய்ய உயா் நீதிமன்றமும், பசுமைத் தீா்ப்பாயமும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பாளையங்கோட்டையை அடுத்த கிருபா நகரில் வடமாநிலத் தொழிலாளா்கள் சுமாா் 300-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகளை தயாரித்து விற்பனைக்காக வைத்துள்ளனா். ஆனால் அந்தச் சிலைகள் மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் வேதிப் பொருள்களை கொண்டு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்தச் சிலைகளை விற்பனை செய்ய மாவட்ட நிா்வாகமும் காவல்துறையையும் தடை விதித்துள்ளது. 

அந்த தடை உத்தரவை ரத்து செய்து தனது விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதிக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை அவசர வழக்காக விசாரணை செய்த தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் வேதிப் பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது. ஆனால், இந்த வேதிப் பொருள்களால் தயாரிக்கப்பட்ட சிலைகளை ஆற்றில் கரைக்க அநுமதிக்கக் கூடாது எனக் கூறி சனிக்கிழமை உத்தரவிட்டார். 

இதையடுத்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது எனவும், தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நெல்லை மாவட்ட ஆட்சியர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் ஆஜரானார்.

இந்த வழக்கில் இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இது முற்றிலும் மத்திய அரசின் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. விதிமுறைகளை மீறி மனுதாரர் சிலைகளை தயாரித்துள்ளார். எனவே பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் வேதிப் பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிடப்படுகிறது. 

மேலும், விஷம் என்பதில் ஒரு துளி விஷம், அதிக விஷம் என்பது இல்லை, எல்லாமே விஷம்தான். மனித உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் இவ்வகை சிலைகள் தயாரிக்க கூடாது என்றனா் நீதிபதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com