நாலுமுக்குத் தோட்டப் பகுதியில் நுழைந்த அரிக்கொம்பன் யானை: தீவிர கண்காணிப்பு!

மேல் கோதையாறு அணை வனப் பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை, நாலுமுக்குத் தேயிலைத் தோட்டப் பகுதியில் நுழைந்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 
கோதையாறு மேலணைப் பகுதியில் விடப்பட்டபோது அரிக்கொம்பன் யானை (கோப்புப் படம்)
கோதையாறு மேலணைப் பகுதியில் விடப்பட்டபோது அரிக்கொம்பன் யானை (கோப்புப் படம்)

அம்பாசமுத்திரம்: மேல் கோதையாறு அணை வனப் பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை, நாலுமுக்குத் தேயிலைத் தோட்டப் பகுதியில் நுழைந்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கிராமங்களுக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து வனத்துறையினர் கடும் முயற்சிக்குப் பின் சண்முகாநதி அணை வனப்பகுதியில் ஜூன் 5ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி அரிக்கொம்பன் யானை பிடிக்கப்பட்டது. பிடிபட்ட யானையை திருநெல்வேலி மாவட்டம் கோதையாறு அணை வனப்பகுதியில் விட்ட வனத்துறையினர் ஜி.பி.எஸ். கருவி மூலம் அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர்.

சில நாள்களில் இயல்பாக உலவத் தொடங்கிய அரிக்கொம்பன் யானை அந்தப் பகுதியில் ஏற்கனவே இருந்த யானைக் கூட்டத்துடன் சேர்ந்து விட்டதாகவும், இயல்பான நிலையில் உணவு உட்கொண்டு வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து சில நாள்களில் அரிக்கொம்பன் குறித்த பேச்சு குறைந்தது.

கோப்பிலிருந்து...
கோப்பிலிருந்து...

இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலையில் அரிக்கொம்பன் யானை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்களைச் சேர்ந்த நாலுமுக்கு, ஊத்துத் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் நுழைந்துள்ளது. அங்கு தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பில் வீடுகளில் பயிரிட்டிருந்த வாழை மரங்களைப் பிடுங்கி சேதப்படுத்தியும் சென்றுள்ளது. 

தொடர்ந்து, ஊத்து தோட்டப்பகுதியில் பள்ளிக்கூடம் அருகில் நடமாடுவதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்ததையடுத்து செவ்வாய்க்கிழமை அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் பள்ளிக்கூடம் செயல்பட்டது. மேல் கோதையாறு வனப்பகுதியில் ஏற்கனவே இருந்த யானைக்கூட்டத்துடன் அரிக்கொம்பன் இணைந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் நாலுமுக்கு தேயிலைத் தோட்டப் பகுதியில் அரிக்கொம்பன் ஒற்றையாக சுற்றித் திரிவதாகவும், இதனால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில்  உள்ளதாகவும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கல் தெரிவித்தனர்.

மேலும் ஊத்துப் பகுதியில் ஆள் இல்லாத வீட்டில் கதவு மற்றும் கூரையைப் பெயர்த்து சேதப்படுத்தியுள்ளது. 

இதையடுத்து வனத்துறையினர் நாலுமுக்கு, ஊத்து தேயிலைத் தோட்டப் பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு அரிக்கொம்பனின் நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com