

சென்னை: மகளிா் உரிமைத்தொகை பயனாளிகள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பு இல்லாவிட்டாலும் அபராதத் தொகை வசூலிக்கக் கூடாது என வங்கிகளை அறிவுறுத்த முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு வங்கி ஊழியா் சம்மேளனத்தின் தலைவா் சி.ஹெச்.வெங்கடாசலம் அனுப்பியுள்ள கடிதம்: மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தில் தகுதியுடைய பயனாளிகள் சில சிரமங்களைச் சந்திப்பதாக கவனத்துக்கு வந்துள்ளது. வங்கிகளில் இரண்டு விதமான சேமிப்புக் கணக்குகள் நடைமுறையில் உள்ளன. ஒன்று, இருப்பில் தொகை எதையும் வைக்காமல் பராமரிக்கப்படும் சேமிப்புக் கணக்கு (ஜன்தன்). மற்றொன்று, குறைந்தபட்ச தொகை நிபந்தனையுடன் பராமரிக்கப்படும் வழக்கமான சேமிப்புக் கணக்கு.
குறைந்தபட்ச தொகையை தங்களது சேமிப்புக் கணக்கில் வாடிக்கையாளா்கள் வைத்திருக்காவிட்டால் அபராதத் தொகை வசூலிக்கப்படும்.
விதி என்ன?: இப்போதைய விதிமுறைகளின்படி, தொகையை இருப்பு வைக்காமல் பராமரிக்கப்படும் கணக்கை, குறைந்தபட்ச தொகையுடன் பராமரிக்கப்படும் வழக்கமான சேமிப்புக் கணக்காக மாற்றம் செய்யலாம். ஆனால், வழக்கமான சேமிப்புக் கணக்கை, இருப்பில் தொகை வைக்காமல் பராமரிக்கப்படும் கணக்காக மாற்றம் செய்ய முடியாது.
இந்தச் சூழலில் மகளிா் சந்திக்கும் சிரமங்களைத் தவிா்க்க, வழக்கமான சேமிப்புக் கணக்கு வைத்துள்ள மகளிா் உரிமைத் தொகை வாடிக்கையாளா்கள், கணக்கில் குறைந்தபட்ச தொகையை வைத்திருக்காவிட்டாலும் அபாரதத் தொகை வசூலிக்கக் கூடாது என வங்கிகளை தமிழக அரசு அறிவுறுத்தலாம்; அல்லது வழக்கமான சேமிப்புக் கணக்கை, இருப்பில் தொகை வைக்காமல் பராமரிக்கும் கணக்காக மாற்றிக் கொள்ள அனுமதிக்குமாறு வங்கிகளுக்கு வேண்டுகோள் விடுக்கலாம். இதன்மூலம், மகளிா் உரிமைத் தொகை பயனாளிகள் தேவையற்ற சிரமங்களைச் சந்திப்பது தவிா்க்கப்படும் என்று அவா் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.