விநாயகர் சிலை கரைத்ததால் வாழ்விடம் இழக்கும் நீர் வாழ் பறவைகள்!

சேலத்தில் விநாயகர் சிலைகளை மூக்கனேரியில் கரைத்ததால், நீர் வாழ் பறவைகள் பாதிப்பதுடன், சூழல் மாசு  ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் தெரிவித்தனர்.
மூக்கனேரியில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலை
மூக்கனேரியில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலை

சேலம்: சேலத்தில் விநாயகர் சிலைகளை மூக்கனேரியில் கரைத்ததால், நீர் வாழ் பறவைகள் பாதிப்பதுடன், சூழல் மாசு  ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் தெரிவித்தனர்.

சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலையில் பெய்யும் மழை நீர் மலை அடிவாரமான புது ஏரிக்கு வந்து நிரம்பி, அங்கிருந்து மூக்கனேரியை வந்தடைகிறது.

சேலத்தில் முக்கிய நீர் நிலையாக விளங்கி வரும் மூக்கனேரி, சுற்று வட்டார பகுதியில் விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

மேலும் நீர் வாழ் பறவைகளுக்கு வாழ்விடமாக திகழ்கிறது. அந்த வகையில், மூக்கனேரியில் 70 வகையான பறவை இனங்கள் உள்ளன. இதில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகள் அடங்கும். சிறிய கொக்குகள், உண்ணி கொக்குகள், பெரிய கொக்குகள், புள்ளி மூக்கு வாத்து, முக்குளிப்பான், நாமக்கோழி, சிறிய மீன் கொத்தி, வெண் மார்பு மீன் கொத்தி, பொரி மீன் கொத்தி, பாம்புதாரா உள்ளிட்ட உள்நாட்டு வகை பறவைகள் தங்கி செல்கின்றன. வெளிநாட்டு வகைகள் பொரி உள்ளான், அன்றில், ஆலா உள்ளிட்ட பல்வேறு வகை பறவைகளும் மூக்கனேரிக்கு வலசை வந்து தங்கி செல்வது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சேலம் மாநகர பகுதியில் 865 சிலைகளும், மாவட்ட பகுதிகளில் 1045 சிலைகள் என சுமார் 2 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகரத்தைப் பொறுத்தவரையில் ஹிந்து அமைப்புகள் சார்பில் 865 சிலைகள் முழுவதும் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மூக்கனேரியில் கரைக்கப்பட்டது.

இதனிடையே விநாயகர் சிலைகளை கரைப்பதால் மூக்கனேரிக்கு உணவை தேடி வரும் உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் தங்களின் வாழ்விடம் தேடி தடுமாறுகிறது. அதேபோல சிலைகளில் உள்ள ரசாயனம் உள்ளிட்ட பொருள்களை மீன்கள் உட்கொள்கிறது. பறவைகளுக்கு முக்கிய உயிர் வாழ் ஆதாரமாக விளங்கும் மீன்களை உட்கொள்வதால் பறவைகளுக்கு பல்வேறு வகை வளர்சிதை மாற்றம் அடைகிறது. இதனால் உணவுச் சங்கிலி பாதிக்கப்படுகிறது என சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, சூழல் ஆர்வலர்கள் கூறியது:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தயாரிக்கப்படும் சிலைகள் ரசாயன கலப்பின்றி முழுக்க களிமண்ணால் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் விதைப்பந்துகளுடன் தயாரிக்கப்படும் சிலைகளை மட்டுமே நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்க வேண்டும். ரசாயனம் கலந்த வர்ணப் பூச்சுகளால் நீர் நிலை மாசு அடைகிறது. மாசு அடைந்த நீரில் வாழும் மீன்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. மீன்களை உண்ணும் பறவைகளும் பல்வேறு வளர்சிதை மாற்றங்களுக்கு பாதிக்கப்படுகிறது.

அதேபோல நீர் நிலையை ஒட்டி விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதால், கரையோரத்தில் வாழும் நீர் வாழ் பறவைகளும் வாழ்விடம் இழந்து தவிக்கும். அதேபோல இரை தேடி வெளியே வரும் பறவைகளுக்கு உணவு கிடைக்காமல் போகிறது. இதனால் பறவைகளின் உணவு சங்கிலி பாதிக்கப்படுகிறது.

மூக்கனேரி இயற்கை சூழ்ந்த பகுதியாக அறியப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள மணல் திட்டுகளில் ஏராளமான பறவைகள் வாழ்ந்து வருகின்றன. நீர் நிலைகள் மாசு அடையாத வகையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட வேண்டும். இதை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com