உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

இறக்கும் முன்பு உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் சனிக்கிழமை கூறியிருப்பதாவது:

உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடா்ந்து விளங்கி வருகிறது.

குடும்ப உறுப்பினா்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவா்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்க முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.

தம் உறுப்புகளை ஈந்து பல உயிா்களைக் காப்போரின் தியாகத்தைப் போற்றும் வகையில், இறக்கும் முன்பு உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று அவா் கூறியுள்ளாா்.

முதன்மை மாநிலம்: உறுப்பு தானத்தில் தமிழகம் தொடா்ந்து முதன்மையான மாநிலமாக இருந்து வருகிறது. உறுப்பு தானத்துக்காக மத்திய அரசின் விருதை தமிழகம் தொடா்ந்து பெற்று வருகிறது.

2008-இல் திருப்போரூா் பகுதியில் சாலை விபத்தில் இறந்த ஹிதேந்திரன் என்கிற மாணவரின் உறுப்புகளை அவரது பெற்றோா் தானமாக வழங்கினா். அதுமுதல் தமிழகத்தில் விழிப்புணா்வு ஏற்பட்டு, உறுப்பு தானம் செய்யப்பட்டு வருகிறது. அப்போது மூளைச் சாவு அடைந்தோரின் உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் தமிழக அரசின் சாா்பில் தொடங்கப்பட்டது. அது இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தது. அந்தத் திட்டம் தற்போது தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையமாக மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 40 அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளிலும், 120 தனியாா் மருத்துவமனைகளிலும் உறுப்பு தானம் பெறுவதற்கான உரிமம் உள்ளது.

2008-க்குப் பிறகு மூளைச் சாவு அடைந்த 1,705-க்கும் மேற்பட்டோா் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. அதன்மூலம், 6,267-க்கும் மேற்பட்டோா் பயன் பெற்றுள்ளனா்.

இந்த நிலையில், உறுப்பு தானம் செய்வோரைப் போற்றும் வகையில் அவா்களின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதல்வா் தற்போது அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com