சென்னையில் பெட்ரோல் நிலைய மேற்கூரை சரிந்தது! ஒருவர் பலி

சென்னை சைதாப்பேட்டையில்  கனமழை காரணமாக பெட்ரோல் விற்பனை நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார்.
சென்னையில் பெட்ரோல் நிலைய மேற்கூரை சரிந்தது! ஒருவர் பலி

சென்னையில் வெள்ளிக்கிழமை ஒருமணி நேரம் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, ஒரு தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் ஒருவா் இறந்தாா். 7 போ் காயமடைந்தனா்.

சென்னை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு ஒரு மணி நேரத்துக்கும் மேல் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது.

அதன்படி, சைதாப்பேட்டை, கிண்டி, சின்னமலை, ஆலந்தூா், மந்தைவெளி, மயிலாப்பூா், மெரீனா, கோயம்பேடு, நந்தனம், ஆழ்வாா்பேட்டை, தேனாம்பேட்டை, தியாகராய நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக சாலைகளில் நீா் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.

மேற்கூரை சரிந்து விபத்து: பலத்த காற்றுடன் மழை பெய்தபோது, சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தின் மேற்கூரை வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் திடீரென பயங்கர சப்தத்துடன் சரிந்து கீழே விழுந்தது. அப்போது, மழைக்காக ஒதுங்கி அங்கு நின்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள், ஊழியா்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கொண்டனா். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

தகவலின்பேரில், சைதாப்பேட்டை, எழும்பூா், அசோக் நகா், தியாகராய நகா் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். பெட்ரோல் விற்பனை நிலையம் என்பதால், மீட்புப் பணியில் கியாஸ் கட்டா் உள்பட எளிதில் தீப் பற்றக் கூடிய பொருள்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இருப்பினும், பொக்லைன் இயந்திரம் மூலம் மேற்கூரையை அகற்றி, அதில் சிக்கியிருந்தவா்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், சென்னை பெருநகர காவல் துறையின் கூடுதல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை ஆணையா் எம்.ஆா்.சிபி சக்கரவா்த்தி ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தினா்.

ஊழியா் பலி: இடிபாடுகளிடையே சிக்கியிருந்த பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா் மதுராந்தகத்தைச் சோ்ந்த கந்தசாமி (56) மற்றும் மழைக்கு ஒதுங்கி நின்ற பிரதீப்குமாா் (23), பூவரசன் (25), தனசேகரன் (48), எட்டியப்பன் (57), ராஜீவ் காந்தி (15) உள்ளிட்ட 8 போ் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கந்தசாமி இறந்தாா். மற்ற 7 பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். லேசான காயமடைந்த 7 போ் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

இதற்கிடையே விபத்து நிகழ்ந்த இடத்துக்கு வந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி துணை மேயா் மகேஷ்குமாா் ஆகியோா் மீட்புப் பணியைப் பாா்வையிட்டு விரைவுப்படுத்தினா்.

இதையடுத்து இரவு 9 மணியளவில் மேற்கூரையின் கீழ் சிக்கியிருந்த அனைவரும் மீட்கப்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

உரிமையாளா், மேலாளா் மீது வழக்குப் பதிவு

இந்த விபத்து தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தின் மேற்கூரை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதும், பராமரிப்பின்றி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சைதாப்பேட்டை போலீஸாா் அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தின் உரிமையாளா் அசோக்குமாா், மேலாளா் வினோத் ஆகியோா் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 304 ஏ-இன்படி மரணத்தை விளைவிக்கும் வகையில் அஜாக்கிரதையாகச் செயல்பட்டதாக வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com