
சென்னை: வாச்சாத்தியில் வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய்த் துறையினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.
வாச்சாத்தி வழக்கில் தண்டனை பெற்றவர்களில் 27 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இன்று பிறப்பிக்கப்பட்ட இந்த தீர்ப்பின் முக்கியம்சங்கள் வெளியாகியிருக்கிறது.
அதில், இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வதும், மக்களின் சொத்துகளை திருடுவதும் அதிகாரிகளின் வேலையல்ல என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சந்தனக் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல்துறை ஒரு வழக்குக் கூட பதிவு செய்யவில்லை. உண்மை குற்றவாளிகள் யாரென்று தெரிந்தும் மாவட்ட ஆட்சியரோ காவல் கண்காணிப்பாளரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பழங்குடியின பெண்களை பாதுகாக்க அப்போரைய அரசு அக்கறை காட்டவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களின் வலியை பணத்தால் ஈடுகட்ட முடியாது.
சந்தன மர கடத்தல்காரர்களை பாதுகாக்கும் நோக்கத்தில், வனத்துறை, காவல்துறை இணைந்து வாச்சாத்தியில் வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளது. சந்தன மர கடத்தல் வழக்கில், அப்பாவி பொதுமக்களை துன்புறுத்தி அவர்கள் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அதிகாரிகளின் மிரட்டல்களுக்குப் பயந்தே, வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களுக்கு நடந்தது என்ன என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டனர். இந்த வன்முறையில் 13 வயது சிறுமி முதல் 8 மாத கர்ப்பிணி வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.
1992ஆம் ஆண்டு நடந்த வாச்சாத்தி சம்பவம் தொடர்பான வழக்கு 19 ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது. வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட அமர்வு 2011ஆம் ஆண்டு, செப்டம்பர் 29ஆம் தேதி, இந்த வழக்கில் தீர்ப்பளித்தது.
அதாவது, 4 ஐஎஃப்எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் 296 பேர் மீது தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பளித்த போது 54 பேர் இறந்துவிட்டனர். மற்ற 215 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அனைவரும் குற்றவாளிகள் என்று நீதிபதி எஸ். குமரகுரு தீர்ப்பளித்திருந்தார்.
இந்த நிலையில், வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தண்டனை பெற்ற 27 பேர் மேல்முறையீடு செய்தனர். இவர்களது மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று, அனைவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து, தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்திருக்கிறது.
வாச்சாத்தி வழக்கு..
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வாச்சாத்தி மலைக் கிராமப் பகுதியில் சிலர் சந்தனமரங்களை வெட்டி கடத்துவதாக கடந்த 1992-ம் ஆண்டு வனத்துறையினருக்கு புகார் வந்தது தொடர்பான விசாரணையின்போது சந்தன கட்டை கடத்தலுக்கும், தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று வாச்சாத்தி கிராம பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து விசாரணை நடத்திய கூட்டுக்குழுவினர் வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த 90 பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள் உள்பட மொத்தம் 133 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் வாச்சாத்தி பகுதியில் கூட்டுக்குழுவினர் சோதனை நடத்தியபோது மலைவாழ் மக்கள் சமூகத்தை சேர்ந்த 18 பெண்களை கூட்டுக்குழுவில் இடம்பெற்ற வனத்துறை, காவல்துறையை சேர்ந்த பலர் பாலியல் பலாத்காரம், வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கிராம மக்கள் தரப்பில் பரபரப்பான புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ அண்ணாமலை 1992-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி அரூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனையடுத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம், நிர்வாகிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாச்சாத்தி கிராமத்தில் கூட்டுக்குழுவினர் சோதனையின்போது நடந்தது என்ன என்பது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தவும், விசாரணைக்கு பின் நடந்த சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென்மண்டல ஆணையர் பாமதி தலைமையிலான குழுவினர் வாச்சாத்தி கிராமத்தில் நேரில் விசாரணை நடத்தியது. இந்த குழுவின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவின்பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் கடந்த 1996ஆம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி இந்த வழக்கின் விசாரணை தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.
இந்த நிலையில் வாச்சாத்தி சம்பவத்தின்போது தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரிந்த ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், உதவி ஆட்சியர்ஆகியோரை வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று குற்றம் சாற்றப்பட்டவர்கள் தரப்பை சேர்ந்த 7 பேர் தருமபுரி அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்து. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாச்சாத்தி வழக்கு தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் வாச்சாத்தி வழக்கின் இறுதி கட்ட விசாரணை தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 5-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்துவந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு முன்பு சி.பி.ஐ. மற்றும் குற்றம்சாற்றப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினார்கள்.
இறுதித் தீர்ப்பு 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.