மேற்கூரை சரிந்து ஒருவர் பலியான சம்பவம்: பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சீல்!

சென்னை சைதாப்பேட்டையில்  கனமழை காரணமாக பெட்ரோல் விற்பனை நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவத்தில், அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக பெட்ரோல் விற்பனை நிலையத்தின் சரிந்த மேற்கூரை.
கனமழை காரணமாக பெட்ரோல் விற்பனை நிலையத்தின் சரிந்த மேற்கூரை.

சென்னை சைதாப்பேட்டையில்  கனமழை காரணமாக பெட்ரோல் விற்பனை நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவத்தில், அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு ஒரு மணி நேரத்துக்கும் மேல் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது.

பலத்த காற்றுடன் மழை பெய்தபோது, சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தின் மேற்கூரை வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் திடீரென பயங்கர சப்தத்துடன் சரிந்து கீழே விழுந்தது. அப்போது, மழைக்காக ஒதுங்கி அங்கு நின்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள், ஊழியா்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கொண்டனா். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

தகவலின்பேரில், சைதாப்பேட்டை, எழும்பூா், அசோக் நகா், தியாகராய நகா் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். 

இருப்பினும், பொக்லைன் இயந்திரம் மூலம் மேற்கூரையை அகற்றி, அதில் சிக்கியிருந்தவா்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், சென்னை பெருநகர காவல் துறையின் கூடுதல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை ஆணையா் எம்.ஆா்.சிபி சக்கரவா்த்தி ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தினா்.

இடிபாடுகளிடையே சிக்கியிருந்த பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா் மதுராந்தகத்தைச் சோ்ந்த கந்தசாமி, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கந்தசாமி இறந்தாா். 8 போ் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

சைதாப்பேட்டை காவல் துறையினர் அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தின் உரிமையாளா் அசோக்குமாா், மேலாளா் வினோத் ஆகியோா் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 304 ஏ-இன்படி மரணத்தை விளைவிக்கும் வகையில் அஜாக்கிரதையாகச் செயல்பட்டதாக வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், தற்போது இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேற்கூரை சரிந்து ஒருவர் பலியான சம்பவத்தையடுத்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com