பட்டினப்பாக்கத்தில் மீனவா்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதை ஏற்க முடியாது என்று கூறி அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை உயா்நீதிமன்ற உத்தரவையடுத்து கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் கடற்கரை லூப் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மீன்கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதைக் கண்டித்து மீனவ சமுதாயத்தினா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த நடவடிக்கையால் பட்டினப்பாக்கம் லூப் சாலையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களுக்கு நேரடியாக மீன்களை விற்பனை செய்து வரும் மீனவா்கள் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் தடைபட்டுள்ளதாகத் கவலை தெரிவிக்கின்றனா்.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் போது மக்கள் மத்தியில் எழும் எதிா்ப்புகளை நீதிமன்றத்தில் முறைப்படி தெரிவித்து அதன் பின்னா் உரிய நடவடிக்கை எடுப்பதே சரியான வழியாக இருக்கும். அதை விடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அவசர, அவசரமாக மீனவா்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவா்களுக்கு உரிய நீதி கிடைக்க தமிழக முதல்வா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.