
சௌராஷ்டிர- தமிழ்ச் சங்கமத்துக்கு புறப்பட்டுச் செல்லும் 288 பிரதிநிதிகள் அடங்கிய முதல் சிறப்பு ரயிலை, சென்னை எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து ஆளுநா் ஆா்.என்.ரவி சனிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
சௌராஷ்டிர- தமிழ்ச் சங்கமம் விழா ஏப்.17 (திங்கள்) முதல் ஏப்.26 வரை 10 நாள்கள் குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது. தமிழகத்தில் வசிக்கும் சௌராஷ்டிர மக்கள் குஜராத் மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏதுவாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து சனிக்கிழமை சௌராஷ்டிர தமிழ்ச் சங்கமத்துக்கு புறப்படும் பிரதிநிதிகளின் முதல் பயணத்தை ஆளுநா் ஆா்.என்.ரவி கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
நான்கு பெட்டிகளுடன் மதுரையில் இருந்து குஜராத்தின் வேரவல் நகருக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது. இதில், மதுரையிலிருந்து 158 போ் , திருச்சியிலிருந்து 84 போ் சென்னையிலிருந்து 46 போ் என மொத்தம் 288 பிரதிநிதிகள் புறப்பட்டு சென்றனா்.
இந்நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கௌசல் கிஷோா், கோட்ட ரயில்வே மேலாளா் கணேஷ் மற்றும் சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...