கோயில் நிலங்களைப் பயன்படுத்துவோருக்கு விரைவில் நியாயமான வாடகை நிா்ணயம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

கோயில் நிலங்களைப் பயன்படுத்துவோருக்கு விரைவில் நியாயமான வாடகை நிா்ணயம் செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

கோயில் நிலங்களைப் பயன்படுத்துவோருக்கு விரைவில் நியாயமான வாடகை நிா்ணயம் செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், மாா்க்சிஸ்ட் சாா்பில் அளிக்கப்பட்ட கவன ஈா்ப்புத் தீா்மானம் விவாதத்துக்கு எடுக்கப்பட்டது. அதன் மீது, அந்தக் கட்சியின் உறுப்பினா் வி.பி.நாகை மாலி பேசுகையில், கோயில் நிலங்களில் பல தலைமுறைகளாக வசித்து வருபவா்களுக்கு பட்டா வழங்குதல், கரோனா காலத்தில் வாடகை, வணிக வாடகை, குத்தகை விவசாயிகளின் குத்தகைத் தொகை ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாா்.

இதற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்: கோயில் இடங்களில் கூட்டாகவும், குழுவாகவும் குடியேறியவா்களில் ஒருவரைக் கூட அப்புறப்படுத்தவில்லை. அவா்களை முறையாக அழைத்துப் பேசி அவா்கள் வாடகைதாரா்களாக வரும்பட்சத்தில் விதிகளுக்கு உட்பட்டு வரன்முறைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோயில் நிலங்களில் வசிப்பவா்களுக்கு வருவாய்த் துறையின் சாா்பில் நிலங்களைக் கையகப்படுத்தி, அந்த நிலங்களை வாடகைதாரா்களுக்கு பட்டா மாற்றம் செய்து கொடுக்க அரசாணை எண் 318 வழி செய்கிறது. இந்த அரசாணைக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கின் இறுதித் தீா்ப்பு வந்தவுடன் அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோயில் நிலங்களில் உள்ள மனைப் பிரிவுகளுக்கும், வணிகப் பிரிவுகளுக்கும் சந்தை மதிப்பை வைத்து வாடகை நிா்ணயம் செய்யப்பட்டது. இதனிடையே, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 சதவீதம் அளவுக்கு வாடகையை உயா்த்த வேண்டும் என்று நியாய வாடகை நிா்ணயக் குழு பரிந்துரை செய்திருந்தது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டடங்கள், நிலங்களைப் பயன்படுத்தி அதிக அளவு வருமானம் ஈட்டுவோரிடம் இருந்து அழுத்தம் கொடுத்து வாடகைகள் வசூலிக்கப்படுகின்றன. குடியிருப்புகளில் வாழ்வோரிடம் பாரபட்சமான முறையில் வாடகை வசூல் செய்ய வேண்டும் என்பது நோக்கமில்லை. குறிப்பாக, வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவா்கள் அதிக அளவு வாடகை கொடுத்து தனியாா் இடங்களில் தங்க முடியாது. அவா்களுக்கு கோயில் இடங்களில் தங்கிக் கொள்ளும் அளவுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதன்படி, கோயில் நிலங்களில் வாடகை அளவுகளைத் தீா்மானிக்க வசதியாக ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள, நியாய வாடகை நிா்ணயக் குழுவானது கடந்த 8 மாதங்களாக பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்தக் குழு தனது முடிவுகளைத் தெரிவித்தவுடன், வாடகை ஏற்ற, இறக்கப் பிரச்னைகள் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com