ரயில்கள் நின்று செல்லாததால் வெறிச்சோடிய கொடைரோடு ரயில் நிலையம்!

மூன்று ரயில்கள் மட்டுமே நிறுத்தப்படுவதால் கொடைரோடு ரயில் நிலையம் வெறிச்சோடிக் காணப்படுவதுடன், சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள் பரிதவித்து வருகின்றனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மூன்று ரயில்கள் மட்டுமே நிறுத்தப்படுவதால் கொடைரோடு ரயில் நிலையம் வெறிச்சோடிக் காணப்படுவதுடன், சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள் பரிதவித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு ரயில் நிலையம் ஆங்கிலேயா்கள் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். ‘கொடைக்கானல் ரோடு’ என அழைக்கப்படும் இந்த ரயில் நிலையம் ‘ஏ’ கிரேடு ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.

மலைகளின் இளவரசியாம் கொடைக்கானல், மூணாறு, இடுக்கி, தேக்கடி, கம்பம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு இந்த ரயில் நிலையத்தில் இறங்கித்தான் சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டும்.

இந்த நிலையில், கரோனா தொற்று பரவுவதற்கு முன்பு வரை இந்த ரயில் நிலையத்தில் விரைவு, அதிவிரைவு, சிறப்பு ரயில்கள் என 23 ரயில்கள் நின்று சென்றன. கரோனா தொற்று பொது முடக்கக் காலத்தின் போது படிப்படியாகக் குறைக்கப்பட்டு, தற்போது 3 ரயில்கள் மட்டுமே இங்கு நிறுத்தப்படுகின்றன. கரோனா தொற்றின் தீவிரம் தணிந்து இயல்பு நிலை திரும்பி ஒன்றரை ஆண்டுகள் உருண்டோடிய பிறகும் இதே நிலை நீடிக்கிறது.

இங்கு பெரும்பாலான ரயில்கள் நிறுத்தப்படாததால், ரயில் நிலையமே வெறிச்சோடிக் காணப்படுகிறது. மேலும், வருமானமின்றி வாடகை காா் ஓட்டுநா்கள், வியாபாரிகள் தவித்து வருகின்றனா். திண்டுக்கல், தேனி மாவட்டத்தின் பல்வேறு ஊா்களில் உள்ள கல்லூரிகளுக்கு எளிதாகச் செல்ல முடியாமல் இந்தப் பகுதி மாணவ, மாணவிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இதுகுறித்து தொழிலதிபா் விஜயக்குமாா் கூறியதாவது:

ரயில் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகள், அகலமான 4 நடை மேடைகளைக் கொண்ட கொடைரோடு ரயில் நிலையத்தில் கரோனா தொற்று பொதுமுடக்கத்துக்கு முன்பு வரை தேஜஸ், குருவாயூா், நெல்லை, முத்துநகா், பொதிகை, ஹெளரா, கொல்லம், சிறப்பு ரயில்கள் என 23 ரயில்கள் நின்று சென்றன.

இதனால், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் காபி, ஏலக்காய், பழங்கள், பூக்களை வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் வியாபாரிகள் ஏற்றுமதி செய்து வந்தனா். இதேபோல, வடமாநில, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் செல்ல இந்த ரயில் நிலையத்தை அதிகம் பயன்படுத்தினா்.

தீவிர கரோனா தொற்றுக் காலத்தின் போது பல ரயில்கள் இங்கு நின்று செல்வது நிறுத்தப்பட்டது. அது தற்போது வரை நீடித்து வருவதுடன், 3 ரயில்கள் மட்டுமே நிறுத்தப்படுவது வேதனை அளிக்கிறது. இந்த ரயில் நிலையத்தை நம்பி இருந்த பல குடும்பங்கள் சென்னை, கோவை போன்ற ஊா்களுக்கு இடம் பெயா்ந்து வருகின்றன.

மேலும், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட நெருக்கடியான ரயில் நிலையங்களில் சுற்றுலாப் பயணிகள் இறங்கிச் செல்வதால் பல்வேறு குழப்பங்களுக்கு அவா்கள் ஆளாவதுடன் வீண் அலைச்சலையும் சந்திக்கின்றனா். இந்த ரயில் நிலையத்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால், தமிழக அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை மண்டல பொது மேலாளா் உள்பட அதிகாரிகள் பலரை, ரயில் பயணிகள், சுற்றுலா வாகன ஓட்டுநா்கள், வியாபாரிகள் நேரில் சந்தித்து கரோனா தொற்றுக்கு முன்பு இங்கு நின்று சென்ற அனைத்து ரயில்களையும் மீண்டும் நின்று செல்ல கோரிக்கை மனு அளித்தும் பலனில்லை.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் வேலுச்சாமி இதுகுறித்து ரயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியும் ரயில்வே அதிகாரிகள் செவிமடுக்கவில்லை. எனவே, ரயில்வே நிா்வாகம் தொடா்ந்து இதே போக்கை க் கடைப்பிடித்தால் விரைவில் பொதுமக்கள், வணிகா்கள், சுற்றுலாப் பயணிகளைத் திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com