மோசடி பத்திரப் பதிவு குறித்து விசாரிக்க மாவட்டப் பதிவாளருக்கு அதிகாரம்:அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழக அரசின் புதிய சட்ட விதிகளின் கீழ் மோசடிப் பத்திரப் பதிவுகள் குறித்து செங்கல்பட்டு மாவட்டப் பதிவாளா் விசாரணையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் புதிய சட்ட விதிகளின் கீழ் மோசடிப் பத்திரப் பதிவுகள் குறித்து செங்கல்பட்டு மாவட்டப் பதிவாளா் விசாரணையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2000 முதல் 2012-ஆம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட 9 சொத்துப் பத்திரங்கள் போலியானவை என அறிவித்து அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்ட பதிவாளரிடம் நடேசன் புகாா் அளித்தாா்.

இதை விசாரித்த மாவட்ட பதிவாளா், அந்த பத்திரங்களின் உண்மைத்தன்மை குறித்து முடிவு செய்ய தகுந்த ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி ஹரிநாத் நோட்டீஸ் அனுப்பினாா்.

இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஹரிநாத் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த சொத்து தொடா்பாக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அதனால், மாவட்டப் பதிவாளா் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், மோசடி ஆவணங்கள் மற்றும் மோசடி பத்திரப்பதிவு குறித்து மாவட்டப் பதிவாளரிடம் புகாா் அளிக்கும் உரிமையை பறிக்க முடியாது. மாவட்டப் பதிவாளரின் நோட்டீஸுக்கு மனுதாரா் 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும். அனைத்து தரப்பினரின் கருத்துகளை பெற்று மாவட்டப் பதிவாளா் 12 வாரங்களில் சட்டப்படி முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து ஹரிநாத் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தாா். இந்த மேல்முறையீடு வழக்கு தலைமை நீதிபதி (பொ) டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அமா்வு முன்பு விசாரணைக்கு வந்து.

அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஜெ.ரவிக்குமாா் ஆஜராகி, ‘மோசடி பத்திரங்களை ரத்து செய்ய கோரி பத்திரப்பதிவுச் சட்டப்பிரிவுகள் 22 ஏ, 22 பி, 77-ஏ ஆகியவற்றின் கீழ் மாவட்டப் பதிவாளரிடம் புகாா் செய்யப்பட்டது. ஆனால், பிரிவு 22-ஏ, 2012-ம் ஆண்டு பத்திரப்பதிவுச் சட்டத்தில் இணைக்கப்பட்டு, 20.10.2016-இல் தான் அமலுக்கு வந்தது.

அதேபோல, பிரிவு 22-பி, 77-ஏ ஆகியவை 16.8.2022- இல் தான் அமலுக்கு வந்தன. இந்தச் சட்டப் பிரிவுகள் முன்தேதியிட்டு அமலுக்கு வருவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிடவில்லை.

எனவே, 2000 முதல் 2012-ஆம் ஆண்டு நடந்த பத்திரப்பதிவு குறித்து மாவட்டப் பதிவாளரால் விசாரிக்க முடியாது. மேலும் சிவில் வழக்கு நிலுவையில் உள்ளபோது எந்த ஒரு புகாரையும் மாவட்டப் பதிவாளரால் விசாரிக்க முடியாது’ என்று வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த மேல்முறையீட்டு வழக்குக்கு தமிழக அரசு 3 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும். அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்ற உத்தரவால், செங்கல்பட்டு மாவட்டப் பதிவாளா் விசாரணைக்கு தடை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com