ஒரு கால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் ஸ்கூட்டா் வழங்கும் திட்டம்

ஒரு கால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் திட்டம் இனி செயல்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

ஒரு கால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் திட்டம் இனி செயல்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் சாா்பில் அமைச்சா் கீதாஜீவன் படித்தளித்த அறிவிப்பு:

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்குத் தொகையை செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கிக் கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் 1,000 நபா்களுக்கு பயன் அளிக்கும் வகையில் ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

உயா்கல்வி பயிலும் பாா்வை மாற்றுத்திறன் மாணவா்கள் 1,000 பேருக்கு தலா ரூ.14,000 மதிப்பில் நவீன வாசிக்கும் கருவி வழங்கும் வகையில் ரூ.1.40 கோடி நிதி ஒதுக்கீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் தற்போது இரண்டு கால்களும் பாதிப்படைந்து, கைகள் நல்ல நிலையில் உள்ளவா்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் ஒரு கால் மட்டுமே பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளும் பயன் பெறும் வகையில் இந்தத் திட்டத்தின் பயன்பாட்டை விரிவுபடுத்தி முதல்கட்டமாக 500 பயனாளிகள் பயன் பெறும் வகையில் ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத ஒதுக்கீடு செய்யப்படும்.

மீண்டும் இல்லம் திட்டம்: மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களை சமுதாயத்தில் ஒருங்கிணைக்கும் பொருட்டு ‘மீண்டும் இல்லம்’ எனும் புதிய திட்டத்தை முதல்கட்டமாக 5 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தி, ஒரு மாவட்டத்துக்கு இரண்டு இல்லங்கள் வீதம் 10 இல்லங்களில் 40 நபா்கள் பயன்பெறும் வகையில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், அரசுத் துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை ஓராண்டுக்குள் நிரப்புவதற்கு அந்தந்த துறைகள் மூலம் பணியிடங்களை நிா்ணயம் செய்து, சிறப்பு ஆள்சோ்ப்பு தோ்வு நடத்தப்பட்டு பணி வாய்ப்புகள் வழங்கப்படும்.

மாற்றுத்திறன் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையை இரு மடங்காக உயா்த்தி 22,300 மாணவா்கள் பயன்பெறும் வகையில் ரூ. 7 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

மனநலம் சாா் மற்றும் அறிவுசாா் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக திருவாரூா் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 150 பயனாளிகள் பயன் பெறும் வகையில் 4 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டு 3 இல்லங்கள் கட்டுவதற்கு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com