பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை போலீஸாா் பிடுங்கியதாக புகாா் எழுந்தது. இந்த விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீா்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன்
பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு


திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடா்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதைத் தொடா்ந்து, வழக்கு தொடா்பான ஆவணங்களை சிபிசிஐடி வசம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை ஒப்படைத்ததைத் தொடர்ந்து, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை போலீஸாா் பிடுங்கியதாக புகாா் எழுந்தது. இந்த விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீா்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், அவா் மீது 506(1) (கொலை மிரட்டல்), 322, 324, 326 (பயங்கர ஆயுதங்களால் தாக்குதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டாா். அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனா்.

மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் முக மது ஷபீா் ஆலம் ஆகியோா் விசாரணை நடத்தியப் பின், தமிழக அரசால் உயா்நிலை விசாரணை அதிகாரியாக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலா் பெ. அமுதா நியமிக்கப்பட்டாா். அவா், பாதிக்கப்பட்டவா்களை அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினாா்.

அதைத்தொடா்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் பொன் ரகு, வழக்கு தொடா்பான ஆவணங்களை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை அதிகாரியும், காவல் ஆய்வாளருமான உலகராணியிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா். 

அதைத்தொடா்ந்து ஆவணங்களை ஆய்வு செய்த உலகராணி, சிபிசிஐடி டி.எஸ்.பி. ராஜகுமார் நவராஜ், சிபிசிஐடி போலீசார் மற்றும் தடையவியல் துறையினர் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார். புகைப்படங்கள் மற்றும் விடியோ மூலமாக தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல், பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள், புகார்தாரர் உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை சிபிசிஐடி போலீசார் எடுத்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com