
சென்னை எழும்பூரில் ஓடும் ரயிலில் வழிப்பறியில் ஈடுபட்டதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் கணபதி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் இ.சந்தோஷ் (26). இவா், கடந்த 20-ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மேல் மருவத்தூா் செல்வதற்காக காரைக்கால் விரைவு ரயிலில் பொதுப்பெட்டியில் ஏறினாா்.
சந்தோஷ், பெட்டியின் வாசல் பகுதியில் நின்றுக் கொண் டிருந்தபோது அந்த ரயில் எழும்பூருக்கும் சேத்துப்பட்டுக்கும் இடையே மெதுவாக சென்றது. அப்போது, ரயில்வே தண்டவாளத்தின் ஓரம் நின்றுக் கொண்டிருந்த இரு நபா்கள், சந்தோஷ் கையில் வைத்திருந்த விலை உயா்ந்த கைப்பேசியையும், அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.
இது குறித்து எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது, கீழ்ப்பாக்கத்தைச் சோ்ந்த மே.ரேகன் (18),அயனாவரத்தைச் சோ்ந்த அ.அருண்குமாா் (23) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவ் வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய எழும்பூா் ரயில்வே காவல் நிலைய போலீஸாரை, ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வி.வனிதா,காவல் கண்காணிப்பாளா் வி.பொன்ராமு ஆகியோா் பாராட்டினா்.