சீர்காழி கோயிலில் திருமுலைப்பால் விழா: தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் தரிசனம்

சீர்காழி கோயிலில் திருமுலைப்பால் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சீர்காழி கோயிலில் திருமுலைப்பால் விழா: தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் தரிசனம்

சீர்காழி கோயிலில் திருமுலைப்பால் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கோயிலில் காசிக்கு இணையாக அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். 

இத்தலத்தில் சமயக்குரவர்களுள் ஒருவரான சம்பந்தர்,  சிவவாத கிருதயர் - பகவதி அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். முருகனின் அம்சம், இளைய பிள்ளையார் என்றும் இவர் வழங்கப்படுகிறார். சிவபாதை கிருதயர் தனது மூன்று வயது குழந்தையான சம்பந்தரை சட்டநாதர் கோயில் பிரம்ம தீர்த்தக்கரையில் அமர வைத்துவிட்டு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட்டு அம்மா, அப்பா என்று அழுதுள்ளார். குழந்தையின் அழுகுரல் கேட்ட சிவபெருமான், பார்வதியை நோக்கி குழந்தையின் பசி போக்க கேட்டுள்ளார். 

அதன்படி சிவனுடன் உமையம்மை சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினார். பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்திருந்தார். குளித்துவிட்டு வந்த தந்தை யார் பால் கொடுத்தது என கேட்டு குச்சியால் சம்பந்தரை அடிக்க ஓங்கிய போது, சிவன் - பார்வதி தரிசனம் தந்த திசையை காட்டி தேவாரத்தின் முதல் பதிகமான தோடுடைய செவியேன் என்ற பதிகத்தை திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். 

அதனைக் கேட்ட தந்தை பரவசமடைந்தார். இந்த தலத்தில் ஞானசம்பந்தர் 67 பதிகங்கள் பாடியுள்ளார். சம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வாங்கிய நிகழ்ச்சி  ஆண்டுதோறும் இக்கோயிலில் திருமுலைப்பால் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இவ்வாண்டு வரும் மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால், கோயில் மண்டபத்தில்  தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் திருமுலைப்பால் விழா நடைபெற்றது. 

ஊமையம்மை எழுந்தருளி ஞானசம்பந்தருக்கு தங்க கிண்ணத்தில் பால் கொடுக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. எளிமையாக நடந்த இவ்விழாவில்  குறைவான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com